பூமியின் நிலப்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு வன வளம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பது சூழல் ஆய்வாளர்களின் கருத்து. இதையடுத்து உலகெங்கும் மரம் நடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஆனால் மரக்கன்றுகள் தேவையான அளவு கிடைப்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
இன்றைய காலத்தில் வீடுகளில் அழகு செடிகள், பூச்செடிகள் வைத்துத் தோட்டங்கள் அமைப்பதை அனைவரும் விரும்புகின்றனர். ஆனால் அதற்கான செடிகள் கிடைப்பது அரிதாகவே உள்ளது. எனவே, மரக்கன்றுகள் உருவாக்கும் நாற்றங்கால் பண்ணைகளின் தேவை இன்றைய காலத்தில் அதிகமாகி வருகிறது.
நாற்றங்கால் பண்ணை அமைப்பது குறித்து திருநெல்வேலி மாவட்டம் வெள்ளங்குளியில் அமைந்துள்ள தட்டப்பாறை மத்திய நாற்றங்கால் அதிகாரி, சமூக காடுகள் திட்ட வனவர் செல்லத்துரை கூறியது: சூழல் மீது ஆர்வம், செடிவளர்ப்பு, மரம் வளர்ப்பில் ஆர்வம் கொண்ட இளைஞர்கள் 4 பேர் ஆளுக்கு ஒரு லட்சம் முதலீடு செய்தால் 6 மாதங்களுக்குப் பிறகு மாதந்தோறும் ஆளுக்கு ரூ. 10 ஆயிரம் லாபம் பெறலாம். இதற்கு தேவை 50 சென்ட் நிலம், நல்ல தண்ணீர் வசதி, மின் வசதி கொண்ட மேடான நிலம். நாற்று வளர்ப்பதற்குத் தேவையான 5 ஷ்7 அளவிலான மக்கும் தன்மையுடைய பிளாஸ்டிக் பைகள், அதில் நிரப்புவதற்கு களிமண் கலந்த வண்டல் மண், தொழு உரம், விதை, ஊட்டச்சத்து உரம், நோய் எதிர்ப்புசக்தி மருந்து உள்ளிட்டவை.
10 ஆயிரம் நாற்றுப் பைகள் தயாரிக்க சுமார் 5 மாதங்களுக்கு மொத்தமாக ரூ. 40 ஆயிரம் செலவாகும். அந்த வகையில் ஒரு மரக்கன்று உருவாக்க ரூ. 4 அடக்கம் ஆகும். நாற்று வளர்ந்து குறைந்தது 5 மாதங்கள் பராமரித்த பின்னர் தான் விற்பனைக்குத் தயாராகும்.
ஒரு மரக்கன்றை ரூ.10 லிருந்து ரூ.15 வரை விலை வைத்து விற்பனை செய்தால் குறைந்தது ரூ.60 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை லாபம் கிடைக்கும். ஒரே நேரத்தில் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை மரக்கன்றுகள் வளர்த்து விற்பனை செய்தால் லாபத்தின் அளவு மேலும் அதிகமாகும்.
இன்று பல்வேறு தன்னார்வ அமைப்புகளும், கார்ப்பரேட் நிறுவனங்களும் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அவற்றைத் தொடர்பு கொண்டு அவர்களிடம் முன்ஒப்புதல் பெற்றுவிட்டால் மரக்கன்றுகள் விற்பனையை உறுதி செய்து கொள்ளலாம்.
மேலும் வீடுகளில் அமைக்கப்படும் தோட்டங்களுக்குத் தேவையான பூச்செடிகளான ரோஜா, மல்லி, குரோட்டன்ஸ் வகைகள் உள்ளிட்ட அழகு செடிகள், விவசாயப் பயிர்களான நெல்லி, எலுமிச்சை உள்ளிட்டவற்றை வளர்த்து விற்பதன் மூலமும் அதிக லாபம் பெறலாம்.
நாற்றங்கால் பண்ணை அமைக்கும் இடங்களில் உள்ள மக்களின் விருப்பத்திற்கேற்ற மரக்கன்றுகளைத் தேர்ந்தெடுத்து நாற்றங்கால் அமைத்து கன்று வளர்ப்பதன் மூலம் மரக்கன்றுகள் விற்பனையாகாமல் தேங்கியிருப்பதைத் தவிர்க்கலாம்.
மீறி விற்பனையாகாமல் இருக்கும் மரக்கன்றுகளை சிறிய பையிலிருந்து பெரிய பைக்கு மாற்றிப் பராமரித்து வந்தால் அதன் வளர்ச்சிக்கேற்றவாறு அதிக விலை வைத்து விற்கலாம். அதன் மூலமும் அதிக லாபம் பெறலாம்.
கவனத்தில் கொள்ள வேண்டியவை: நாற்றங்கால் பண்ணை அமைப்பதற்கு மேடான நிலமாக இருந்தால் மழைக்காலத்தில் நீர் தேங்கி மரக்கன்றுகள் அழுகாமல் தவிர்க்கலாம். விதை நட்டு 15 நாள்கள் வரை காலை, மாலை தண்ணீர் தெளிக்க வேண்டும். அதற்குப் பின்னர் ஒரு வேளை தண்ணீர் தெளிக்க வேண்டும். 20 நாள்களுக்கு ஒரு முறை பையை மாற்ற வேண்டும். 30ஆவது நாள் ஊட்டச்சத்து உரமும், 15 நாள்களுக்கு ஒருமுறை நோய் எதிர்ப்பு மருந்தும் தெளிக்க வேண்டும். புங்கன், வேம்பு, பூவரசு, சிவப்பு சந்தனம், வாதாம் மரம் உள்ளிட்ட மரக்கன்றுகள் தயாரித்தால் அதிகமாக விற்பனையாகும்.
சவுக்கு போன்றவை மொத்தமாக ஒப்புதல் பெற்று வளர்த்து தரலாம். நாற்றுப் பைகளில் மண் நிரப்புதல், நாற்றுப் பைகளுக்குத் தண்ணீர் தெளித்துப் பராமரிப்பதற்கு பணியாளர்களை நியமிப்பதைகாட்டிலும், தாங்களே ஈடுபட்டால் அதற்கு உரிய கூலியும் நமக்கு கிடைப்பது கூடுதல் லாபமாக அமையும்.
இயற்கை மீது நாட்டமுள்ள, செடி வளர்ப்பதில் ஆர்வமுள்ள இளைஞர்கள் நாற்றங்கால் பண்ணை தொழிலில் ஈடுபட்டால் சூழலை பாதுகாப்பதில் அவர்களின் பங்கு அளப்பரியதாக இருக்கும்.
மேலும் நாற்றங்கால் பண்ணை அமைப்பது குறித்து விளக்கம் பெற 9786932520 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.
- கு. அழகியநம்பி
No comments:
Post a Comment