அரியானா மாநிலம் அம்பாலாவைச் சேர்ந்த சர்விந்த் தமன், தனது வீட்டு முற்றத்தில் பாதாம் செடியை வளர்த்து வருகிறார். அங்குள்ள வேளாண் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரியும் இவர், செடி வளர்ப்பில் ஆர்வம் கொண்டவர்.
தனது வீட்டு தோட்டத்தில் தான் விரும்பி சாப் பிடும் பாதாமையும் விளைவிக்க விரும்பினார். பாதாம் வளர்ப்பு முறை பற்றிய கட்டுரைகளை இணையதளத்தில் தேடி படித்திருக்கிறார். வீடியோக்கள் வடிவிலும் பாதாம் வளர்ப்பு முறை பற்றி அறிந்து கொண்டவர் வீட்டில் வளர்க்க தொடங்கிவிட்டார். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இவருடைய பாதாம் செடி 4 அடிக்கு மேல் வளர்ந்துள்ளது. பாதாம் செடியை எப்படி வளர்க்கலாம் என்பது பற்றி விளக்குகிறார்.
‘‘நல்ல தரமான பாதாமை தேர்ந்தெடுக்க வேண்டும். அவற்றுள் சிலவற்றை 24 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பூஞ்சை மற்றும் பிற தொற்றுகளால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க சிறிதளவு லவங்கப்பட்டையையும் அதனுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். பாதாம் நன்கு ஊறிய பிறகு அவற்றை டிஷ்யூ பேப்பரில் பொதிந்து காற்று புகாத டப்பாவில் அடைத்து 0-10 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும்.
பாதாம் முளை விட தொடங்கியவுடன் பூந்தொட்டியில் புதைத்து வைக்க வேண்டும். பூந்தொட்டியை வெறுமனே மண் கொண்டு நிரப்பாமல் களிமண், மணல், மண் புழு உரம், பசுவின் சாணம் போன்றவற்றையும் மண்ணோடு கலந்து கொள்ளலாம். மண்ணில் போதுமான அளவு ஈரப்பதம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். பூச்சிகள் தொல்லை யில் இருந்து செடியை பாதுகாக்க நான் கூடுதல் முயற்சிகள் எதுவும் எடுக்கவில்லை. அனைத்து பருவ கால நிலைகளிலும் செடி சீராக வளர்ந்து வருகிறது. பாதாமை பொறுத்தவரை நவம்பர் மாதத்திற்கு முன்பு செடி வளர்க்க தொடங்குவது சிறந்தது. மார்ச் மாதத்திற்குள் அது நன்றாக வளர தொடங்கிவிடும்.
செடி நன்றாக வளர்ந்து அதில் பாதாம் காய்த்து குலுங்குவதற்கு 3 முதல் 4 வருடங்கள் ஆகும். எனவே இந்த செடியை வளர்ப்பதற்கு அதிக பொறுமை தேவை’’ என்கிறார்.
சர்விந்த் தமன், தனது பாதாம் செடி வளர்ப்பு அனுபவங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார். அவரிடம் பலர் பாதாம் வளர்க்க ஆலோசனையும் கேட்கிறார்கள்.
No comments:
Post a Comment