Monday, October 2, 2023

மூன்றடைப்பு அருகே வீட்டில் உறவினர் நகையை மறைத்து வைத்த பெண் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

நாங்குநேரி:


தூத்துக்குடி அருகே உள்ள அந்தோணியார்புரம் வேளாங்கண்ணி தெருவை சேர்ந்த மாடக்கண்ணன் மனைவி செல்வமணி (வயது 30). இவரும், இவரது கணவரும், தாய் பிச்சம்மாள் ஆகியோரும் மூன்றடைப்பு அருகே உள்ள பனையங்குளம் கிராமத்தில் கொடை விழாவிற்காக உறவினர் சுப்பையா வீட்டிற்கு கடந்த 24-ந் தேதி வந்திருந்தனர். விழா முடிந்து ஊருக்கு புறப்படுவதற்காக கொண்டு வந்த பொருட்களையும், நகைகளையும் பாதுகாப்பாக பேக்கிங் செய்தனர். இந்தநிலையில் நேரம் அதிகமாகி விட்டதால் அங்கேயே மீண்டும் தங்கி நேற்று காலை ஊருக்கு புறப்பட தயாராகினார்கள்.


அப்போது அவர்கள் பையில் வைத்திருந்த நகையை பார்த்தபோது அதில் இருந்த 22 பவுன் நகைகள் மாயமாகின. இதனால் அதிர்ச்சியடைந்து அவர்கள் உடனடியாக மூன்றடைப்பு போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் நாங்குநேரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ மற்றும் மூன்றடைப்பு போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது சுப்பையா மனைவி முத்துலட்சுமி (45) நகைகளை எடுத்து மறைத்து வைத்திருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. உடனடியாக நகைகளை மீட்டனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து முத்துலட்சுமியை போலீசார் நேற்று மாலை கைது செய்தனர்.

மருதகுளம் நெல்லை பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் கருத்தரங்கம் நடந்தது.

 திருநெல்வேலி

இட்டமொழி:


மருதகுளம் நெல்லை பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை சார்பில் தொழில்நுட்ப கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஜின்னா ஷேக் முகமது தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக வள்ளியூர் பெட் பொறியியல் கல்லூரி கணினி அறிவியல்துறை பேராசிரியர் வள்ளிரதி பேசினார். இதையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் பெற்றனர். ஏற்பாடுகளை கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை தலைவர் பிச்சம்மாள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் செய்யது முகம்மது அலி, ஹஷீனத் ஜஸீலா ஆகியோர் செய்திருந்தனர்.

மூன்றடைப்பு அருகே டீக்கடை பூட்டை உடைத்து பணத்தை மர்மநபர் திருடிச் சென்றார்.

 

திருநெல்வேலி

நாங்குநேரி:


மூன்றடைப்பு அருகே உள்ள மருதகுளத்தை சேர்ந்த சேகர் மனைவி அன்னலட்சுமி (வயது 51). இவர் மருதகுளம் மெயின் ரோட்டில் உள்ள பள்ளி எதிரே டீக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு வியாபாரம் முடிந்த பின்னர் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று முன்தினம் காலையில் அன்னலட்சுமி தனது கடைக்கு சென்ற போது கடை பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தாா். இதுகுறித்து மூன்றடைப்பு போலீசாருக்கு தகவல் அளித்தார். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்திய போது கடையில் இருந்த ரூ.3500 திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கடையில் திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.