Thursday, January 4, 2024

அகதிகள்போல் இடம்பெயறும் தென் தமிழக மக்கள்.. இப்படியொரு அவலமா? தனியார் வானிலை ஆய்வாளர் ஆதங்கம் : People of south tamil nadu are migrating like refugees for jobs

    தென் மாவட்டங்களில் போதிய வேலைவாய்ப்பு திட்டங்களை மேற்கொள்ளாத காரணத்தால் அகதிகளை போல தென் தமிழ்நாட்டு மக்கள் இடம்பெயர்வதாக வேதனையை பதிவு செய்து இருக்கிறார் தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா. 

 தென் மாவட்ட பெரு மழையை துல்லியமாக கணித்த தென்காசி வெதர்மேன் என்று அழைக்கப்படும் ராஜா ஒரு விரிவான பதிவை வெளியிட்டு உள்ளார். அதில், "அகதிகளை போல இடம் பெயரும் தென்தமிழக மக்கள்: புறக்கணிக்கப்படுகிறதா தென் மாவட்டங்கள்? ஊர் கோவில் கொடைகளுக்கும், தீபாவளி, பொங்கல் திருவிழாக்களுக்கும், கிறிஸ்துமசுக்கும், ரம்ஜானுக்கும் சென்னையிலிருந்தும், கோவையிலிருந்தும், தங்கள் சொந்த ஊர்களுக்கு வந்து 4 நாட்கள் தங்கிவிட்டு ஏக்கத்தோடு மீண்டும் பஸ்சோ, ரயிலோ ஏறிச் செல்கிறது தென் மாவட்டத்தைச் சேர்ந்த "ஒரு தலைமுறை." 




 ஆம்.. கடந்த ஒரு தலைமுறையாகவே, தங்கள் சொந்த மாநிலத்திற்கு உள்ளே.. புலம் பெயர் தமிழர்களாகத்தான் வாழ்கிறார்கள் தென் மாவட்ட மக்கள். சுமார் ஏழேகால் கோடி மக்கள் தொகை (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு) கொண்ட தமிழ்நாட்டில் ஏறத்தாழ இரண்டு கோடி மக்கள் தென் மாவட்டங்களில் வாழ்கின்றனர். அதில் அதிகப்படியாக 33.22 லட்சம் பேர் திருநெல்வேலி மாவட்டத்திலும் 30.38 லட்சம் பேர் மதுரை மாவட்டத்திலும் வசிக்கின்றனர். 

  அதிக மாநகராட்சிகளை கொண்ட தென் தமிழகம் : அதிக மாநகராட்சிகள் பெற்ற தென் மாவட்டங்கள் வளர்ச்சி அடைந்து விட்டதா என்று பார்த்தால் அதுதான் இல்லை. தமிழகத்தின் கடைக் கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள நாகர்கோயிலில் பிரதான தொழில். மீன்பிடித்தலும், அதனை சார்ந்த சந்தைப் படுத்துதலும் வளர்ச்சியின் முக்கிய ஆதாரங்கள். வேறு ஏதேனும்... குறிப்பிடத்தக்க வகையில் பொருளாதார ரீதியாக வாழ்க்கை தரத்தை உயர்த்தும் அளவுக்கு ஆலைகளோ... சென்னையில் பரந்து விரிந்திருக்கும் பன்னாட்டு நிறுவனங்களோ இங்கு இல்லை. 

 அகதிகளை போல இடம் பெயரும் மக்கள்: கண்கூடாக, அகதிகளை போல தென் தமிழக மக்கள் இடம் பெயர்ந்து வாழ்வதை அறிந்தும், இதுவரை மாநில அரசுகள் செய்தது என்ன? தென் மாவட்டங்களுக்கு ஏன் பாரபட்சம்? தென் தமிழகத்திற்கு சென்னையிலிருந்து கூடுதலாக ரயில் விட வேண்டும் என்று கேட்கிறோமே, இருக்கும் ரயில்களை குறைக்க.. அவர்களை அவர்களின் நிலங்களிலேயே வாழ வைக்க வழி என்ன என்று இதுவரை கேட்டுள்ளோமா? சென்னையில் ஒரு நெல்லைக்காரரையும், தூத்துக்குடிக்காரரையும் பார்க்க முடியும்போது, இந்த மாவட்டங்களில் ஒரு சென்னைக்காரர் குடும்பத்தோடு குடி பெயர்ந்து வந்துள்ளதை பரவலாக பார்க்க முடிகிறதா? 

 பச்சைக் குழந்தைக்கும் தெரியுமே, இது பாரபட்சமின்றி வேறு என்ன? சமீபத்தில் தென் மாவட்டம் தொடர்பாக கேட்ட பெரிய திட்டமே, எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரை பக்கம் அமைப்பது பற்றிதான். அதுவும் செங்கல் நட்டதோடு கிணற்றில் போட்ட கல் போல கிடப்பில் போய் விட்டது. அதுபோலத்தான்  நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலம்.

  கூடங்குளம் அணுமின் நிலையத்தால் உருவான கட்டமைப்பால், சுற்றுவட்டாரத்தில் சில கிராமங்களுக்கு கூடுதலாக மருத்துவ வசதி கிடைத்துள்ளது, உடன்குடி அனல் மின் நிலையம் அமைக்கும் பணியால் கொஞ்சம் வேலை உருவாகும் எனக் கூறப்படுகிறது, குலசை ராக்கெட் ஏவுதளம் திட்டமும் அப்படித்தான். 

 ஆனால் இவை அனைத்திலும் ஒரு ஒற்றுமை கவனித்தீர்களா. எல்லாமே மத்திய அரசின் திட்டம். பரவாயில்லை.. ஏதோ ஒரு அரசு, இதையாவது செய்கிறதே என்றும் கடந்து போய் விட முடியாது இங்கும் தமிழர்களுக்கு போதுமான வேலைவாய்ப்பு எதுவும் இல்லை. வளர்ச்சியில் பின்தங்கிய இராமநாதபுரம், விருதுநகர்: நாடு முழுவதும், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, வங்கி கடன் வசதி, ஊட்டச்சத்து, இணையதள வசதி, அடிப்படை உட்கட்டமைப்பை மேம்படுத்துதல், தொழிற்சாலைகளை பெருக்குதல், கிராம சாலைகள் இணைப்பு, விவசாயம், குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு காரணிகள் அடிப்படையில் வளர்ச்சியில் பின் தங்கிய 115 மாவட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்கள் இந்த பட்டியலில் உள்ளன. திண்டுக்கல், மதுரை, தேனி, இராமநாதபுரம், விருதுநகர் சிவகங்கை தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி தென்காசி ஆகிய 10 தென் மாவட்ட மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அரசு முன் வர வேண்டும். மக்களின் கருத்துக்களை பதிவிடுங்கள்." என்று குறிப்பிட்டு உள்ளார்.

Private meteorologist Raja has expressed his anguish that the people of South Tamil Nadu are migrating like refugees due to insufficient employment programs in the south districts