Friday, December 23, 2022

தட்கலில் எடுப்பது சிரமம்; பிரீமியம் தட்கலில் எளிதாய் கிடைக்கிறது:ரெயில் டிக்கெட் முன்பதிவில் நடப்பது என்ன?-பயணிகள் குமுறல்

 தட்கலில் எடுப்பது சிரமம் என்றும், பிரீமியம் தட்கலில் எளிதாய் கிடைக்கிறது என்றும் கூறும் பயணிகள் ரெயில் டிக்கெட் முன்பதிவில் நடப்பது என்ன? என்பது பற்றி குமுறினர்.

திருநெல்வேலி

ரெயில் நிலையம் சென்று டிக்கெட்டுகளை நேரடியாக எடுப்பதற்கு பதிலாக, கம்ப்யூட்டர், செல்போன்களில் இணையதளம் வழியாக முன்பதிவு செய்வது அதிகரித்து வருகிறது.


திட்டமிட்டு பயணம் செய்பவர்கள் முன்கூட்டியே தங்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து விடுகிறார்கள். திடீரென்று பயணம் மேற்கொள்பவர்களுக்கு டிக்கெட் எடுக்க தட்கல் முறை கை கொடுக்கிறது.


தட்கல், பிரீமியம் தட்கல்


அதில் தட்கல் என்றும், பிரீமியம் தட்கல் என்றும் டிக்கெட் எடுக்க இரண்டு வழிகள் இருக்கின்றன.


பிரீமியம் தட்கல் முறை கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் ஆனது.


வழக்கமான கட்டணத்தைக் காட்டிலும் தட்கல் கட்டணம், தூங்கும் வசதி கொண்ட சாதாரண பெட்டிகளுக்கு 10 சதவீதம் கூடுதலும், குளிர் சாதன வசதி கொண்ட உயர் வகுப்புகளுக்கு 30 சதவீதம் கூடுதலும் வசூலிக்கப்படுகிறது.


பிரீமியம் தட்கல் கட்டணம், புக்கிங் எண்ணிக்கையையும், குறைந்து வரும் சீட் எண்ணிக்கையையும் பொறுத்து மாறுபடும். எளிதாக சொல்லப்போனால், சீட்டுக்கான தேவை அதிகரிக்க, கட்டணமும் அதிகரிக்கும். சில நேரங்களில் சாதாரண கட்டணத்தைக் காட்டிலும் 3 மடங்கு அதிகமாகக் கூட உயரலாம்.


தட்கல், பிரீமியம் தட்கல் இரண்டுமே பயண தேதித்துக்கு ஒரு நாளுக்கு முன்பு, பதிவு செய்ய வேண்டும்.


ஏ.சி. வகுப்பில் பயணம் செய்ய காலை 10 மணிக்கும், மற்ற வகுப்புகளுக்கு காலை 11 மணிக்கும் தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல் புக்கிங் தொடங்கும்.


விளக்கம் இல்லை


தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு ஐ.ஆர்.சி.டி.சி. தளத்தில் நுழைந்தால், 'தட்கல்', 'பிரீமியம் தட்கல்' என்ற இரண்டு விருப்பப்பகுதிகள் இருக்கும்.


உதாரணமாக 100 டிக்கெட்டுகள் அதில் இருப்பதாக வைத்துக் கொள்வோம். பலர் தட்கல் விருப்பப் பகுதியில் நுழைந்து அந்த டிக்கெட்டை எடுக்க முயற்சிப்பார்கள்.


சிலர் மறுநாளே பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கும். எனவே, எவ்வளவு பணம் ஆனாலும் பரவாயில்லை என்று பிரீமியம் தட்கல் விருப்பப் பகுதியில் நுழைவார்கள். அவர்களுக்கு எளிதாக டிக்கெட் கிடைத்துவிடும். ஆனால், சாதாரண தட்கல் விருப்பப் பகுதியில் நுழைந்தவர்களுக்கு எளிதில் கிடைப்பது இல்லை. ஏதாவது பிரச்சினை வரும். அல்லது பிரீமியம் முறையில் நுழைய வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். அதற்குள் 100 டிக்கெட்டுகளும் காலியாகிவிட்டதாக திரையில் காட்டிவிடும்.


இதற்கு காரணம் என்ன என்பது யாருக்கும் தெளிவாகத் தெரிவது இல்லை. யாரும் விளக்குவதும் இல்லை.


சாதாரண தட்கல் முறை, பிரீமியம் தட்கல் முறை, இந்த இரண்டையும் இயக்க வெவ்வேறு கம்ப்யூட்டர் சர்வர்கள் இருக்குமாம். பிரீமியம் முறைக்கான சர்வர் அதிவேகத்தில் இயங்குவதும், சாதாரண தட்கல் முறைக்கான சர்வரோ மெதுவாக இயங்குவதுமே அதற்கு காரணம் என்றும் சிலர் சொல்கிறார்கள். பிரீமியம் முறையில் அதிக கட்டணத்தை வசூலிக்கவே இந்த ஏற்பாடு என்றும் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் ரெயில்வே அதிகாரிகள் அதை திட்டவட்டமாக மறுக்கிறார்கள். ரெயில் பயணிகளோ குமுறுகிறார்கள்.


இனி அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்:-


கொடுமையானது


நெல்லை டவுனை சேர்ந்த விஜயகுமார் பாக்கியம்:-


சென்னை கல்லூரியில் படிக்கும் எனது மகன் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நெல்லைக்கு வருவதற்காக தட்கலில் டிக்கெட் எடுக்க வந்தேன். அந்த ரெயிலில் 210 தட்கல் டிக்கெட் வழங்கப்பட்டது. அதில் 110 டிக்கெட்டுகளை பிரீமியம் தட்கல் பிரிவுக்கு கொண்டு சென்று விட்டனர். இதனால் தட்கல் டிக்கெட்டுகள் எளிதாக கிடைப்பது இல்லை. உடனடியாக தீர்ந்து விடுகின்றன. அதன்பிறகு பிரீமியம் தட்கல் டிக்கெட் எடுக்க வேண்டிய நிலைக்கு பயணிகள் தள்ளப்படுகிறார்கள். இது கொடுமையானது.


இதுதவிர அனைத்து ரெயில்களிலும் இரண்டாம் வகுப்பு தூங்கும் படுக்கை வசதி பெட்டிகளை குறைத்து, 3 அடுக்கு ஏ.சி. பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறார்கள். மேலும் பொது பெட்டிகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டு வருகிறது. இது சாதாரண மக்களின் ரெயில் பயணத்தை கேள்விக்குறியாக்கி விடுகிறது. தற்போது சிறப்பு ரெயில்கள் என்ற பெயரில் முழுமையாக பிரீமியம் கட்டணத்தில் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இத்தகைய செயல்பாடுகள் ரெயிலை தனியாரிடமே கொடுத்து விடுவதற்கு முன்னோட்டம் ஆகும். எனவே, ரெயில்வே நிர்வாகம் சேவை மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும்.


வற்புறுத்தவில்லை


நெல்லை சந்திப்பு பகுதியை சேர்ந்த தங்கமாரி:-


நான் ரெயில் நிலையத்துக்கு நேரடியாக வந்து தட்கலில் டிக்கெட் பதிவு செய்து உள்ளேன். வரிசையில் காத்திருந்து பதிவு செய்ததால், டிக்கெட் கிடைத்து உள்ளது. வருகிற ஏப்ரல் மாதம் வரை இப்படித்தான் டிக்கெட் கிடைப்பதில் சிரமமாக இருக்கும். அதே நேரத்தில் பிரீமியம் தட்கல் டிக்கெட் என்றால் உடனே கிடைத்து விடும். ஆனால் அதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். எனவே, தட்கல் டிக்கெட் எடுத்து உள்ளேன்.


பழையபேட்டையை சேர்ந்த டாக்சி டிரைவர் செல்வசங்கர்:-


ரெயிலில் அவசரமாக பயணம் செய்வதற்கு பிரீமியம் தட்கல் டிக்கெட் கிடைக்கிறது. பயணம் செய்வதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு கூட இந்த வகை டிக்கெட் கிடைப்பது, அவசர பயணம் மேற்கொள்வோருக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது.


நெல்லை டவுனை சேர்ந்த கல்யாணசுந்தரி:-


நெல்லையில் இருந்து கடலூருக்கு செல்வதற்கு டிக்கெட் எடுக்க வந்தோம். ஆனால் தட்கலில் காத்திருப்போர் பட்டியலுக்கு வந்து விட்டது. பிரீமியம் தட்கலில் டிக்கெட் எடுத்தால் அதிக கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். இதனால் நாங்கள் டிக்கெட் எடுக்கவில்லை. மாற்று ஏற்பாடு செய்து கொள்ள உள்ளோம். பிரீமியம் டிக்கெட் எடுக்குமாறு ரெயில்வே ஊழியர் வற்புறுத்தவில்லை.


சேவை மனப்பான்மை


தென்காசி எல்.ஆர்.எஸ். பாளையத்தை சேர்ந்த பஞ்சவர்ணம்:-


ெரயில்களை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக மத்திய அரசு இயக்குகிறது. வணிகரீதியில் இருந்தாலும் சாதாரண மற்றும் நடுத்தர மக்களுக்காக சேவை மனப்பான்மையுடன் இயக்க வேண்டும். அவசரத்துக்காக வெளியூர் பயணம் மேற்கொள்ளும்போது தட்கலில் டிக்கெட் எடுத்தால் அதில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளதாக காட்டும். அதே நேரத்தில் பிரீமியம் தட்கலில் எடுத்தால் உடனே டிக்கெட் கிடைக்கும். அதுவும் நாட்கள் குறைய குறைய ஏலமிடுவது போல் டிக்கெட்டின் விலை அதிகரிக்கும். இது முழுக்க முழுக்க மக்களின் பணத்தை கொள்ளையடிப்பது போல் உள்ளது. இரண்டு, மூன்று மடங்கு கட்டணம் அதிகரித்தால் சாதாரண மக்கள் எப்படி பயணம் செய்ய முடியும்? எனவே இதை அரசு நிறுத்த வேண்டும்.


முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை


இதுபற்றி தெற்கு ரெயில்வே முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி குகனேசன் கூறியதாவது:-


திடீர் என்று பயணம் செய்ய விரும்பும் பயணிகளுக்காக தட்கல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இருக்கைகள் ஒதுக்கீடு வரையறுக்கப்பட்டுள்ளது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இருக்கைகள் நிரப்பப்படும். தட்கல் பிரீமியம் என்பது ஒரு வித்தியாசமான கோட்டா முறையாகும். இதில் மாறும் கட்டணம் (டைனமிக் கட்டணம்) முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான ரெயில்களில் பிரீமியம் தட்கல் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஒரு வகுப்பின் அதிகபட்சம் 30 சதவீதம் தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல் முறை இருக்கும். தற்போது சர்வர் பிரச்சினை இல்லை. தட்கல் டிக்கெட்டுகள் பொதுமக்களுக்கு அதிகம் கிடைக்கின்றன.


நேரடியாகவும், இணைய முன்பதிவு மூலமாகவும் முன்பதிவு செய்யலாம். பயன்படுத்தப்படாத பிரீமியம் தட்கல் கோட்டாவுக்கு, அட்டவணைகள் தயாரிக்கும்போது தட்கல் காத்திருப்போர் பட்டியல் இருப்பவர்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்படும். சாதாரண தட்கல் கோட்டாவில் காத்திருப்பு பட்டியல் இல்லை என்றால், இந்த இருக்கைகள் பொது காத்திருப்பு பட்டியல் பயணிகளுக்கு வழங்கப்படும்.


இவ்வாறு அவர்கள் கூறினர்.