திருநெல்வேலிமாவட்டத்தில் ஒமிக்ரான் தொற்று பரவலை கண்காணிக்க திருநெல்வேலிரயில் நிலையத்திலும் கொரோனா பரிசோதனை செய்ய கலெக்டர் விஷ்ணு ஏற்பாடு செய்துள்ளார். திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திற்கு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்தும், கொல்லம் மார்க்கத்தில் இருந்தும், கர்நாடக மாநிலத்தின் பெங்களூருவில் இருந்தும் தினசரி ரயில் சேவை உள்ளது. இந்த ரயில்கள் திருநெல்வேலிரயில் நிலையத்தை கடந்து செல்கின்றன. இது தவிர மும்பை, டெல்லி உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் ரயில் பயணிகள் திருநெல்வேலிரயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். தற்போது கொரோனா வைரசின் அடுத்த நிலையான ஒமிக்ரான் தொற்று கர்நாடக மாநிலத்தில் கண்டறியப்பட்டுள்ள நிலையில், விமான நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் ரயில் மூலம் வரும் பயணிகளையும் கண்காணித்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக திருநெல்வேலிசந்திப்பு ரயில் நிலையத்தில் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி பணிகளை நேற்று கலெக்டர் விஷ்ணு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ரயிலில் இறங்கும் பயணிகளிடம் முறையாக பரிசோதனை மற்றும் தடுப்பூசி குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்படுகிறதா என்பதை கேட்டறிந்தார். பின்னர் கலெக்டர் விஷ்ணு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கொரோனாவை விட வீரியமிக்க வைரசான ஒமிக்ரான் பாதிப்பு திருநெல்வேலி மாவட்டத்தில் இல்லை. இருப்பினும் வெளிநாட்டில் இருந்து வருவோரை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.
திருவனந்தபுரம், மதுரை, தூத்துக்குடி விமான நிலையங்களில் இருந்து வெளிநாடுகளில் இருந்து திருநெல்வேலிமாவட்டத்திற்கு வருவோர் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, சுகாதாரத்துறை துணை இயக்குநர், திருநெல்வேலி மாநகர நல அலுவலருக்கு அனுப்பி வைக்கப்படும். அவர்கள் தனிக்குழு அமைத்து வெளிநாட்டில் இருந்து வந்தோரை கண்காணிப்பர். நெல்லை மாவட்டத்திற்கு வெளிமாநிலங்களில் இருந்து வருவோரை கண்காணிக்க இன்டர் ஸ்டேட் எல்லைகள் நமக்கு இல்லை. எனினும் நமது முழு கவனமும் ரயில் நிலையத்தில் இருக்க வேண்டும். அதன் வழியாக மட்டுமே வெளிமாநில பயணிகள் நுழைவர். அவ்வாறு நுழையும் பயணிகளுக்கு நோய்த் தொற்று குறித்தும், தடுப்பூசி போட்ட விவரங்களும் சேகரிக்கப்படும்.
தடுப்பூசி செலுத்தியிருக்காவிட்டால் கோவாக்சின், கோவிஷீல்டு என விரும்புகிற தடுப்பூசி ரயில் நிலையத்தில் போடப்படும். ஒமிக்ரான் நோய்த் தொற்றை எதிர்கொள்ளும் வகையில் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 100 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. கொரோனாவிற்கு அமைக்கப்பட்டுள்ள 1500 படுக்கைகளையும் 24 மணி நேரத்தில் ஒமிக்ரான் சிகிச்சைக்கு தகுந்தவாறு மாற்றி அமைத்துக் கொள்ள முடியும். நெல்லை மாவட்டத்தில் 3 இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் இருப்பதால், ஆக்சிஜன் தடுப்பாட்டிற்கும் வாய்ப்பு இல்லை’’ என்றார்.
ஆய்வின்போது திருநெல்வேலி மாநகராட்சி சுகாதார அதிகாரி ராஜேந்திரன், தச்சை மண்டல உதவி கமிஷனர் ஐயப்பன், திருநெல்வேலி தாசில்தார் சண்முக சுப்பிரமணியன் ஆகியோர் உடன் இருந்தனர்.
72 சதவீதம் பேருக்கு தடுப்பூசி
திருநெல்வேலி மாவட்டத்தில் 72 சதவீதம் பேருக்கு முதற்கட்ட கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி குறைவாக போட்டுள்ள மக்கள் வசிக்கும் பகுதிகள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும். கல்லூரிகளில் தடுப்பூசி போடாத மாணவர்களுக்கு மெகா முகாம்கள் நடத்தப்பட்டு, தடுப்பூசி செலுத்தப்படும் என பேட்டியின் போது கலெக்டர் விஷ்ணு தெரிவித்தார்.
No comments:
Post a Comment