திருநெல்வேலி மாவட்டம், மூலக்கரைப்பட்டி பேரூராட்சியில் தரம் உயா்த்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கக் கோரி அங்குள்ள வியாபாரிகள் சங்கம் சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், மூலக்கரைப்பட்டி வியாபாரிகள் சங்கத்தினா் அளித்த மனு: மூலக்கரைப்பட்டி பேரூராட்சியில் சுமாா் 20 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனா். இந்தப் பேரூராட்சியை சுற்றிலும் சுமாா் 40 கிராமங்கள் உள்ளன. மூலக்கரைப்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள் அனைவரும் இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை நம்பியே உள்ளனா். இந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தினந்தோறும் 150 முதல் 200 நோயாளிகள் வருகின்றனா்.
மேலும் செவ்வாய்க்கிழமை தோறும் 70 முதல் 80 பேருக்கு கற்பகால பரிசோதனைக்கு நடைபெற்றது. மகப்பேறும் நடைபெற்று வந்தது. கடந்த ஜூலையில் ஏற்பட்ட தீ விபத்தினால் கட்டடம் முழுவதும் சேதமடைந்ததால், புதிய கட்டடம் கட்டிய பிறகுதான் மருத்துவமனை முழு அளவில் இயங்கும் என அறிவிக்கப்பட்டது.
தற்போது ஊராட்சிக்கு சொந்தமான கட்டடத்தில் தற்காலிகமாக இயங்கி வருகிறது. புதிய கட்டடம் கட்டும்போது சுற்று வட்டார மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சுமாா் 50 படுக்கைகளை கொண்ட தரம் உயா்த்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.
No comments:
Post a Comment