Wednesday, December 1, 2021

பள்ளி கட்டணம் கட்டாமல் TC வாங்கினால் இனி சிக்கல்.. சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு !

 கல்விக் கட்டணம் செலுத்தாமல் வாங்கிச் செல்லும் மாற்றுச் சான்றிதழ்களில் "கல்விக் கட்டணம் பாக்கி" என முத்திரை குத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் முழுக் கல்விக் கட்டணத்தையும் செலுத்திவிட்டால் புதிய மாற்றுச் சான்றிதழ் வழங்கலாம் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற அறிவிப்பால் பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியும், கவலையும் ஏற்பட்டுள்ளது.

 கொரோனாவால் பாதிப்பு 

பெற்றோர், மாணவர்கள் பாதிப்பு

2020ம் ஆண்டு தொடங்கிய கொரோனா பாதிப்பால் பலர் வேலையிழந்தனர். பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்தனர். இதனால் பல பெற்றோர்கள் தனியார் பள்ளிகளில் படிக்கும் தங்கள் பிள்ளைகளின் கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாமல் அவதிப்பட்டனர். இதனால் பல பெற்றோர்கள் தனியார் பள்ளியில் இருந்து மாற்றுச் சான்றிதழ் வாங்கிக்கொண்டு அரசுப் பள்ளிகளில் சேர்த்தனர். பல தனியார் பள்ளிகளில் ஏற்கனவே இருந்த கல்வி கட்டண பாக்கியை செலுத்தாமல் மாற்றுச் சான்றிதழ் வழங்க முடியாது என கூறியதால் பெற்றோர்கள் கவலை அடைந்தனர். இதனால் பள்ளியில் இருந்து விடுபட முடியாமலும், அரசுப் பள்ளியில் சேர்க்க முடியாமலும், கல்வியை அதே பள்ளியில் தொடரமுடியாமலும் தவித்தனர்.


 டி.சி. இல்லாமல் சேர்க்கலாம் 

பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

இது தொடர்பான பிரச்சனை தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறையின் கவனத்திற்கு சென்றது. இதற்கு விளக்கம் அளித்த கல்வித்துறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வேலையையும், பொருளாதாரத்தையும் இழந்து பொதுமக்கள் தங்கள் பிள்ளைகளை கட்டணம் குறைவாக வசூலிக்கும் தனியார் பள்ளிகளுக்கோ அல்லது அரசுப் பள்ளிகளுக்கோ மாற்றுகின்றனர். எனவே பழைய பள்ளியில் இருந்து வரும் மாணவர்கள் டி.சி. வாங்கி வரவில்லை என்றாலும் அவர்களை சேர்த்துக்கொள்ள பள்ளி நிர்வாகங்கள் முன்வரவேண்டும் என தெரிவித்திருந்தது.


வழக்கு

இதை எதிர்த்து தனியார் பள்ளிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தங்கள் தரப்பில் வாதாடிய தனியார் பள்ளிகள் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை நம்பித்தான் கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளும், செலவினங்களும் உள்ளது. மாணவர்கள் கல்விக் கட்டணத்தை முழுமையாக செலுத்தாவிடில், நிர்வாகம் பெரிதும் பாதிக்கப்படும் என தெரிவித்தனர். அதுமட்டுமின்றி மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் தேவையில்லை என அறிவிப்பதால், எந்தெந்த மாணவர்கள் படிப்பை தொடர்கின்றனர், எந்த பள்ளியில் சேர்கின்றனர் என்ற விவரங்கள் தெரியாமல் போகும் என்றும், இதனால் பள்ளிகளின் நிர்வாகம்தான் பாதிக்கப்படும் என வாதிடப்பட்டது. மேலும் கட்டணம் வசூலிக்காமல் மாற்றுச் சான்றிதழ் வழங்கிவிட்டால் பின்னர் வசூலிப்பது கடினம் என்றும் எனவே திரும்ப பணத்தை செலுத்தும் வகையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் தனியார் பள்ளிகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜி.சங்கரன் கோரிக்கை விடுத்தார்.


டி.சி.யில் கட்டண பாக்கி என முத்திரை

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி முழுக் கல்விக் கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு உரிய மாற்றுச் சான்றிதழை வழங்க வேண்டும் என உத்தரவிட்டார் அதே சமயம் கட்டண பாக்கி வைத்துள்ள மாணவர்களுக்கு வழங்கப்படும் டி.சி.யில் 'கட்டண பாக்கி உள்ளது' (Fees Pending) என குறிப்பிடலாம் எனவும் அனுமதி அளித்துள்ளார். மேலும் மாணவர்களுக்கான இ.எம்.ஐ.எஸ். இணைய தளத்தில் தேவையான திருத்தங்களை 2 வாரத்தில் மேற்கொள்ள வேண்டுமெனவும் உத்தரவிட்டு தனியார் பள்ளிகளின் தொடர்ந்த வழக்கை முடித்துவைத்தார்.

ஆன்லைனில் இலவசமாக தமிழ் கல்வி.. பெங்களூர் தமிழ் அறக்கட்டளை ஏற்பாடு..

 பெங்களூர் தமிழ் அறக்கட்டளை நடத்தும், ஆன்லைன் அடிப்படை தமிழ் கற்றல் வகுப்பு படி நிலை-1, டிசம்பர் மாதம் 1ம் தேதி துவங்குகிறது.தமிழ் அறக்கட்டளை-பெங்களூர், உலகெங்கிலும் உள்ள தொலைதூரத் தமிழர்களுக்குப் பயனளிக்கும் வகையில், நன்கு வடிவமைக்கப்பட்ட ஆன்லைன் முறை மூலம் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது.வெறும் 30 நாட்களில் அடிப்படை தமிழ் அறிவை வழங்கும் நோக்குடன், இந்தாண்டு மே 1ம் தேதி ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டது.

 இது தமிழ் அறிஞர் பொள்ளாச்சி நேசனால் கட்டமைக்கப்பட்ட பாட திட்டமாகும்.இந்த நிலையில், 2021ம் ஆண்டு டிசம்பர் 1 முதல் 30 வரை அடிப்படை தமிழ் கற்றல் வகுப்பு-நிலை-1 தொடங்க உள்ளது. இது 8வது பேட்ஜ் ஆகும். இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 கல்வியின் சிறப்பம்சங்கள் இவைதான்:

• தமிழறிஞர் பொள்ளாச்சி நாசன் வடிவமைத்த பாடத்திட்டம்

• வகுப்பு ஜூம் ஆப் மூலம் நடைபெறும்.

• வகுப்பு நேரம்: தினமும் மாலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை• சனி, ஞாயிறு விடுமுறை

• பயிற்றுவிக்கும் மொழி தமில்.

• கற்றலுடன் சுவாரஸ்யமான கதைகள் மற்றும் பயனுள்ள பாடல்கள்

• தமிழ் எழுத படிக்கத் தெரியாதவர்களுக்கு முன்னுரிமை

• பாட வகுப்புக்கு கட்டணம் கிடையாது, முற்றிலும் இலவசம்.

• முதல் 100 விண்ணப்பதாரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்

.• தன்னார்வ நன்கொடைகளை தமிழ் அறக்கட்டளை ஏற்றுக்கொள்ளும். வங்கி மூலம் பணம் செலுத்த விரும்புவோர் தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

• சேர்க்கை 30.11.2021க்கு முடிவடைகிறது.

•முதலில் வருபவருக்கு முதலில் அனுமதி

• வினவலுக்கும் தொடர்பு கொள்ளவும்:

தமிழ் அறக்கட்டளை, 

பெங்களூரு 

எஸ்.குமணராசன், தலைவர்

ஏ.தனஞ்செயன், செயலாளர்

முத்துமணி நன்னன், பொருளாளர்
மொபைல்: 9483755974, 6363118988, 9820281623
• மின்னஞ்சல்: tamilfoundationblr@gmail.com
• பதிவு செய்ய, கிளிக் செய்யவும்: https://forms.gle/VBpoNdVL1ZQnUxtD9

மருதகுளம் தவறான சிகிச்சையால் இளைஞர் உயிரிழப்பு: மருத்துவர் மீது வழக்கு - செவிலியர் கைது!

 நெல்லை அருகே தவறான சிகிச்சையால் உயிரிழந்த சம்பவத்தில் செவிலியர் கைது செய்யப்பட்டார். சித்த மருத்துவர் உட்பட மூன்று பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.  


நெல்லை மாவட்டம் கோவை குளம் பகுதியை சேர்ந்தவர் மாரி  (23) இவர் கடந்த 2-ஆம் தேதி காய்ச்சலால் அவர்  பாதிக்கப்பட்ட நிலையில்  மருதகுளம் பகுதியில் உள்ள தனியார் கிளினிக்கில்  சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இடுப்பில் ஊசி போடப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அங்கிருந்த மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில்  மருந்துகள் கொடுக்கப் பட்டுள்ளது. இதனையடுத்து அன்றிரவு மாரிக்கு இடுப்பில் கடுமையான வலி ஏற்பட்டு  கால்   நடக்க முடியாத நிலை ஏற்பட்டதாக தெரிகிறது . 

இதனையடுத்து  மறுநாளும் அவர்  மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மீண்டும் வேறு ஊசி போடப்பட்டு  மருந்துகள் கொடுக்கப்பட்டு அனுப்பியுள்ளனர். இருப்பினும் அவரது உடல்நிலை மிகவும் மோசமாகியதையடுத்து நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஊசி முறையாக செலுத்தாததால் நரம்பு மற்றும் ரத்த நாளங்கள் சேதமடைந்ததால் கால்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.  

மேலும் இடது காலில் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் நெல்லை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அறுவை சிகிச்சை செய்த பின்னரும் அவரது காலில் மீண்டும் இரத்த ஓட்டம்  சீராக வில்லை  இதன் காரணமாக  இடதுகாலை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என குடும்பத்தினரிடம்  அரசு மருத்துவர்கள் கூறியுள்ளார். இல்லையெனில் உயிருக்கு ஆபத்தாகி விடும்  என அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து மேல்சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாரியை குடும்பத்தினர் அழைத்துச் சென்றுள்ளனர். 

அங்கும் இளைஞரின் காலை அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில் கடந்த 13ம் தேதி மாரியின் தந்தை பேச்சி மூன்றடைப்பு காவல் நிலையத்தில் மருத்துவமனை மீதும் மருத்துவர்கள் மீதும் புகார் மனு  அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மூன்றடைப்பு போலீசார் சித்த மருத்துவர் சக்தி,  மருத்துவ   மாணவர் அருண் செல்வம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர் இதனிடையே  மீண்டும் மாரியை உறவினர்கள்  நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில்  கடந்த 28ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

இதனைத்தொடர்ந்து மாரியின் உறவினர்கள் அரசு மருத்துவமனை  முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதோடு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கும் தவறான சிகிச்சை அளித்தது தொடர்பாக புகார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் தலைமையிலான மருத்துவ குழுவினர் மருத குளத்தில் உள்ள மாரி சிகிச்சை பெற்ற தனியார் மருத்துவமனை இழுத்து மூடினர்.

அதனைத் தொடர்ந்து மூன்றடைப்பு காவல் நிலையத்தில் மாரியின் தந்தை அளித்த புகார் தொடர்பாக பதியப்பட்ட வழக்கு மரணத்தை ஏற்படுத்தும் விதமாக செயல்படுதல் (304) போலியாக மருத்துவர் என கூறி சிகிச்சை அளித்தல் 420 ,417 உள்ளிட்ட பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மருத்துவமனையில் ஊசி செலுத்திய செவிலியர் இசக்கியம்மாளை  கைது செய்ததோடு சித்த மருத்துவர் சக்தி மற்றும் அருண் செல்வம் ஆகியோரையும் போலீசார் தேடி வருகின்றனர்.