`தைப்பொங்கல்’ என்றாலே கடித்துச் சுவைக்கக் கரும்பும் பனங்கிழங்கும்தான் நினைவுக்கு வரும். சில பகுதிகளில் பொங்கல் வழிபாட்டில் இடம்பெறும் கிழங்கு வகைகளில் பனங்கிழங்கும் ஒன்று.
இக்கிழங்கு கரிசல் மண், செம்மண்ணில் வளரும் என்றாலும், செம்மண்ணில் விளையும் கிழங்குக்குத் தனிச்சுவை உண்டு. தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம் சுற்று வட்டார செம்மண் பகுதிகளில் பனங் கிழங்கு அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம் சோனகன்விளையிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள மேலக் கானத்தில் பனங்கிழங்கு சாகுபடி செய்துவருகிறார் மணிமுத்து. பனங்கிழங்கு அறுவடைப் பணிகளைக் கவனித்துக் கொண்டிருந்த அவரை `பொங்கல் சிறப்பிதழு’க்காகச் சந்தித்தோம்.
பாத்தியிலிருந்து பனங்கிழங்குகளைத் தோண்டி எடுத்தபடியே நம்மிடம் பேசத் தொடங்கினார். “இந்தப் பகுதி முழுக்க வாழை விவசாயம்தான் நடக்குது. வாழை விவசாயத்தோட வருஷா வருஷம் பனங்கிழங்குச் சாகுபடியும் நடக்குது. எங்கப்பா ராஜமாணிக்கம், 30 வருஷத்துக்கு மேல வாழை விவசாயமும், கிழங்கு சாகுபடியும் செஞ்சுகிட்டு வர்றாங்க. இப்போ 11 வருஷமா இயற்கை முறையில விவசாயம் செய்துகிட்டு வர்றாங்க.
‘‘இப்போ ரெண்டு வருஷமா 2 ஏக்கர்ல ஏத்தன், கற்பூரவல்லி வாழை சாகுபடி செஞ்சுகிட்டு வர்றேன். விவசாய நிலத்துக்குள்ளயும், வேலி ஓரங்களிலும் 200 பனைமரங்கள் இருக்கு. இந்தப் பனைகள்ல இருந்து பதனீர் இறக்குறதில்ல. ஆனா, ஒவ்வொரு வருஷமும் பனை சீஸன் முடிஞ்சு கீழே விழுற பனம்பழங்களைச் சேகரிச்சு, பனங்கிழங்கு சாகுபடியை செஞ்சுகிட்டு வர்றோம். எங்க பகுதியில பனங்கிழங்கு சாகுபடியைப் பெரும்பாலும் பெண்கள்தான் செய்வாங்க. ஏன்னா, இதுல தண்ணி தெளிக்கிறது மட்டும்தான் வேலை. மத்தபடி எந்தப் பராமரிப்பும் தேவையில்ல. இந்த வருஷம் 26,000 பனைவிதைகளைக் கிழங்கு சாகுபடிக்காக ஊன்றியிருக்கேன்” என்றவர், வருமானம் குறித்துப் பேசினார்.
“ஒரு பனம்பழத்துல 3 விதைகள் இருக்கும். போன வருஷம் 10,000 பனம்பழங்களை நடவுக்காகச் சேகரிச்சேன். 30,000 பனைவிதை களை ஊன்றினேன். பன்றித்தாக்குதல், வண்டு அரிப்பு, விளைச்சல் இல்லாத கிழங்குகள்ன்னு அறுவடையில 6,000 கிழங்குகள் பழுதாயிடுச்சு. மீதமுள்ள 24,000 கிழங்களை நேரடியா விற்பனை செஞ்சேன். ஒரு கிழங்கு 3 ரூபாய். அதுமூலம் 72,000 ரூபாய் வருமானமாக் கிடைச்சது. பனம்பழம் சேகரிப்பு, பனைவிதை பிரிச்சு அடுக்கக் கூலி, கிழங்கு தோண்டி எடுக்குற கூலின்னு 10,000 ரூபாய் செலவாச்சு. அதுபோக, 62,000 ரூபாய் லாபமாக் கிடைச்சது. இந்த வேலைகளையும் வீட்டுல உள்ளவங்களே செஞ்சா இந்தச் செலவுத் தொகையும் மிச்சம்தான்” என்றார்.
தொடர்புக்கு, மணிமுத்து,
செல்போன்: 94984 24218
இப்படித்தான் பனங்கிழங்கு சாகுபடி!
பனங்கிழங்கு சாகுபடி செய்வது குறித்து மணிமுத்து கூறிய தகவல்கள் பாடமாக இங்கே:
ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரைதான் பனை பருவம் (சீஸன்). இந்தப் பருவத்துக்குப் பிறகுதான் பனங்காய்கள், பழுத்துப் பனம்பழங்களாகக் கீழே விழும். ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை கிடைக்கும் பழங்களைச் சேகரித்து நிழலான பகுதியில் குவித்து வைக்க வேண்டும். அக்டோபர், நவம்பர் மாதங்களில் விதை நட்டால் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் அறுவடைக்கு வரும். 5 அடி நீளம், 3 அடி அகலம், ஓர் அடி உயரத்தில் பாத்தி அமைக்க வேண்டும். கிடைக்கும் பனை விதையின் எண்ணிக்கையைப் பொறுத்து, எத்தனை பாத்திகள் வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம்.
குறைந்தபட்சம் ஓர் அடி உயரத்தில் பாத்தி அமைத்தால்தான் கிழங்கு ஆழமாக வேரூன்றி வளரும். அறுவடையின்போது பிடுங்கி எடுக்கவும் சுலபமாக இருக்கும். சில விவசாயிகள் பாத்தி அமைக்காமல் தரைக்குக் கீழ் கால் முதல் அரை அடி ஆழத்தில் குழி எடுத்து, குழிக்குள் விதைகளை அடுக்குவார்கள். இதனால், அறுவடையின்போது கிழங்குகளைப் பிடுங்கி எடுப்பதில் சிரமம் ஏற்படுவதுடன் கிழங்குகள் அதிக எண்ணிக்கையில் சேதாரமாகும்.
பாத்தி எடுத்த பிறகு, 10 கிலோ மட்கிய சாணம், 2 கிலோ வேப்ப இலை, 3 கிலோ அடுப்புச்சாம்பலை (ஒரு பாத்திக்கான அளவு) கலவையாக்கிப் பரவலாகத் தூவி விட வேண்டும். பாத்தியின் மீது விதைகளை நெருக்கமாக அடுக்க வேண்டும். இதன் மேல் இன்னொரு அடுக்கும் அடுக்கலாம். கூடுதலாக அடுக்குவதால் இரண்டு பாத்திக்குச் செலவாகும் தண்ணீர் மிச்சமாகும்.
விதை ஊன்றும் அன்று பழங்களின் சதைப்பகுதியைக் கையால் பிதுக்கி விதைகளைத் தனித்தனியே எடுத்து விட வேண்டும். பனம்பழங்களில் குறைந்தபட்சம் ஒன்றும் அதிகபட்சமாக மூன்று விதைகளும் இருக்கும். இதில் வண்டு துளைத்த கொட்டைகள், மிகச்சிறிய கொட்டைகள் எனச் சேதாரமான கொட்டைகளைக் கழித்து விட வேண்டும். பாத்தியின் மீது ‘கண் பாகம்’ கீழ் நோக்கி இருக்கும் படி நெருக்கமாக அடுக்க வேண்டும். அடுக்கிய பிறகு, அதன் மீது லேசாக மண் தூவி, பாத்தி ஓரங்களில் மண் அணைத்துவிட்டு, பாத்தி முழுவதும் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
தண்ணீர் ஊற்றும்போது, மேலுள்ள மணல், இரண்டு அடுக்குப் பனை விதைகளின் இடுக்குகளில் சென்று சேரும். மேல் பகுதியில், மண் குறைந்தால், மீண்டும் மண்ணைத் தூவி மீண்டும் தண்ணீர் ஊற்ற வேண்டும். ஒருநாள் இடைவெளியில் தொடர்ந்து தண்ணீர் தெளிக்க வேண்டும். அதற்குப் பிறகு, ஈரப்பதத்தைப் பொறுத்துத் தண்ணீர் தெளிக்கலாம். இப்பாத்திகளின் மீது பனை ஓலைகளை மூடாக்காக மூடினால், நீர் ஆவியாகாது. இதனால், கோழிகளும் பாத்திகளைக் கிளறாது.
20-ம் நாளுக்கு மேல் முளைக்கத் தொடங்கும். 40-ம் நாளுக்கு மேல் வேர் பிடித்து வளரும். 60-ம் நாளுக்கு மேல் கிழங்கு பருமனாகத் தொடங்கும். 90 முதல் 110-ம் நாளுக்குள் அறுவடை செய்யலாம். 90-ம் நாளுக்கு மேல் பாத்திகளின் மேல் பகுதியில் ஆங்காங்கே வெடிப்புக் காணப்படும். அப்போது ஓரிடத்தில் தோண்டிப் பார்க்க வேண்டும். கிழங்கின் தோல் வெடித்த நிலையில் காணப்பட்டால், அறுவடைக்குத் தயார் என்று அர்த்தம். அதிகபட்சமாக 110-ம் நாளுக்குள் அறுவடை செய்துவிட வேண்டும்.
No comments:
Post a Comment