Friday, December 23, 2022

தட்கலில் எடுப்பது சிரமம்; பிரீமியம் தட்கலில் எளிதாய் கிடைக்கிறது:ரெயில் டிக்கெட் முன்பதிவில் நடப்பது என்ன?-பயணிகள் குமுறல்

 தட்கலில் எடுப்பது சிரமம் என்றும், பிரீமியம் தட்கலில் எளிதாய் கிடைக்கிறது என்றும் கூறும் பயணிகள் ரெயில் டிக்கெட் முன்பதிவில் நடப்பது என்ன? என்பது பற்றி குமுறினர்.

திருநெல்வேலி

ரெயில் நிலையம் சென்று டிக்கெட்டுகளை நேரடியாக எடுப்பதற்கு பதிலாக, கம்ப்யூட்டர், செல்போன்களில் இணையதளம் வழியாக முன்பதிவு செய்வது அதிகரித்து வருகிறது.


திட்டமிட்டு பயணம் செய்பவர்கள் முன்கூட்டியே தங்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து விடுகிறார்கள். திடீரென்று பயணம் மேற்கொள்பவர்களுக்கு டிக்கெட் எடுக்க தட்கல் முறை கை கொடுக்கிறது.


தட்கல், பிரீமியம் தட்கல்


அதில் தட்கல் என்றும், பிரீமியம் தட்கல் என்றும் டிக்கெட் எடுக்க இரண்டு வழிகள் இருக்கின்றன.


பிரீமியம் தட்கல் முறை கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் ஆனது.


வழக்கமான கட்டணத்தைக் காட்டிலும் தட்கல் கட்டணம், தூங்கும் வசதி கொண்ட சாதாரண பெட்டிகளுக்கு 10 சதவீதம் கூடுதலும், குளிர் சாதன வசதி கொண்ட உயர் வகுப்புகளுக்கு 30 சதவீதம் கூடுதலும் வசூலிக்கப்படுகிறது.


பிரீமியம் தட்கல் கட்டணம், புக்கிங் எண்ணிக்கையையும், குறைந்து வரும் சீட் எண்ணிக்கையையும் பொறுத்து மாறுபடும். எளிதாக சொல்லப்போனால், சீட்டுக்கான தேவை அதிகரிக்க, கட்டணமும் அதிகரிக்கும். சில நேரங்களில் சாதாரண கட்டணத்தைக் காட்டிலும் 3 மடங்கு அதிகமாகக் கூட உயரலாம்.


தட்கல், பிரீமியம் தட்கல் இரண்டுமே பயண தேதித்துக்கு ஒரு நாளுக்கு முன்பு, பதிவு செய்ய வேண்டும்.


ஏ.சி. வகுப்பில் பயணம் செய்ய காலை 10 மணிக்கும், மற்ற வகுப்புகளுக்கு காலை 11 மணிக்கும் தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல் புக்கிங் தொடங்கும்.


விளக்கம் இல்லை


தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு ஐ.ஆர்.சி.டி.சி. தளத்தில் நுழைந்தால், 'தட்கல்', 'பிரீமியம் தட்கல்' என்ற இரண்டு விருப்பப்பகுதிகள் இருக்கும்.


உதாரணமாக 100 டிக்கெட்டுகள் அதில் இருப்பதாக வைத்துக் கொள்வோம். பலர் தட்கல் விருப்பப் பகுதியில் நுழைந்து அந்த டிக்கெட்டை எடுக்க முயற்சிப்பார்கள்.


சிலர் மறுநாளே பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கும். எனவே, எவ்வளவு பணம் ஆனாலும் பரவாயில்லை என்று பிரீமியம் தட்கல் விருப்பப் பகுதியில் நுழைவார்கள். அவர்களுக்கு எளிதாக டிக்கெட் கிடைத்துவிடும். ஆனால், சாதாரண தட்கல் விருப்பப் பகுதியில் நுழைந்தவர்களுக்கு எளிதில் கிடைப்பது இல்லை. ஏதாவது பிரச்சினை வரும். அல்லது பிரீமியம் முறையில் நுழைய வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். அதற்குள் 100 டிக்கெட்டுகளும் காலியாகிவிட்டதாக திரையில் காட்டிவிடும்.


இதற்கு காரணம் என்ன என்பது யாருக்கும் தெளிவாகத் தெரிவது இல்லை. யாரும் விளக்குவதும் இல்லை.


சாதாரண தட்கல் முறை, பிரீமியம் தட்கல் முறை, இந்த இரண்டையும் இயக்க வெவ்வேறு கம்ப்யூட்டர் சர்வர்கள் இருக்குமாம். பிரீமியம் முறைக்கான சர்வர் அதிவேகத்தில் இயங்குவதும், சாதாரண தட்கல் முறைக்கான சர்வரோ மெதுவாக இயங்குவதுமே அதற்கு காரணம் என்றும் சிலர் சொல்கிறார்கள். பிரீமியம் முறையில் அதிக கட்டணத்தை வசூலிக்கவே இந்த ஏற்பாடு என்றும் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் ரெயில்வே அதிகாரிகள் அதை திட்டவட்டமாக மறுக்கிறார்கள். ரெயில் பயணிகளோ குமுறுகிறார்கள்.


இனி அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்:-


கொடுமையானது


நெல்லை டவுனை சேர்ந்த விஜயகுமார் பாக்கியம்:-


சென்னை கல்லூரியில் படிக்கும் எனது மகன் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நெல்லைக்கு வருவதற்காக தட்கலில் டிக்கெட் எடுக்க வந்தேன். அந்த ரெயிலில் 210 தட்கல் டிக்கெட் வழங்கப்பட்டது. அதில் 110 டிக்கெட்டுகளை பிரீமியம் தட்கல் பிரிவுக்கு கொண்டு சென்று விட்டனர். இதனால் தட்கல் டிக்கெட்டுகள் எளிதாக கிடைப்பது இல்லை. உடனடியாக தீர்ந்து விடுகின்றன. அதன்பிறகு பிரீமியம் தட்கல் டிக்கெட் எடுக்க வேண்டிய நிலைக்கு பயணிகள் தள்ளப்படுகிறார்கள். இது கொடுமையானது.


இதுதவிர அனைத்து ரெயில்களிலும் இரண்டாம் வகுப்பு தூங்கும் படுக்கை வசதி பெட்டிகளை குறைத்து, 3 அடுக்கு ஏ.சி. பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறார்கள். மேலும் பொது பெட்டிகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டு வருகிறது. இது சாதாரண மக்களின் ரெயில் பயணத்தை கேள்விக்குறியாக்கி விடுகிறது. தற்போது சிறப்பு ரெயில்கள் என்ற பெயரில் முழுமையாக பிரீமியம் கட்டணத்தில் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இத்தகைய செயல்பாடுகள் ரெயிலை தனியாரிடமே கொடுத்து விடுவதற்கு முன்னோட்டம் ஆகும். எனவே, ரெயில்வே நிர்வாகம் சேவை மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும்.


வற்புறுத்தவில்லை


நெல்லை சந்திப்பு பகுதியை சேர்ந்த தங்கமாரி:-


நான் ரெயில் நிலையத்துக்கு நேரடியாக வந்து தட்கலில் டிக்கெட் பதிவு செய்து உள்ளேன். வரிசையில் காத்திருந்து பதிவு செய்ததால், டிக்கெட் கிடைத்து உள்ளது. வருகிற ஏப்ரல் மாதம் வரை இப்படித்தான் டிக்கெட் கிடைப்பதில் சிரமமாக இருக்கும். அதே நேரத்தில் பிரீமியம் தட்கல் டிக்கெட் என்றால் உடனே கிடைத்து விடும். ஆனால் அதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். எனவே, தட்கல் டிக்கெட் எடுத்து உள்ளேன்.


பழையபேட்டையை சேர்ந்த டாக்சி டிரைவர் செல்வசங்கர்:-


ரெயிலில் அவசரமாக பயணம் செய்வதற்கு பிரீமியம் தட்கல் டிக்கெட் கிடைக்கிறது. பயணம் செய்வதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு கூட இந்த வகை டிக்கெட் கிடைப்பது, அவசர பயணம் மேற்கொள்வோருக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது.


நெல்லை டவுனை சேர்ந்த கல்யாணசுந்தரி:-


நெல்லையில் இருந்து கடலூருக்கு செல்வதற்கு டிக்கெட் எடுக்க வந்தோம். ஆனால் தட்கலில் காத்திருப்போர் பட்டியலுக்கு வந்து விட்டது. பிரீமியம் தட்கலில் டிக்கெட் எடுத்தால் அதிக கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். இதனால் நாங்கள் டிக்கெட் எடுக்கவில்லை. மாற்று ஏற்பாடு செய்து கொள்ள உள்ளோம். பிரீமியம் டிக்கெட் எடுக்குமாறு ரெயில்வே ஊழியர் வற்புறுத்தவில்லை.


சேவை மனப்பான்மை


தென்காசி எல்.ஆர்.எஸ். பாளையத்தை சேர்ந்த பஞ்சவர்ணம்:-


ெரயில்களை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக மத்திய அரசு இயக்குகிறது. வணிகரீதியில் இருந்தாலும் சாதாரண மற்றும் நடுத்தர மக்களுக்காக சேவை மனப்பான்மையுடன் இயக்க வேண்டும். அவசரத்துக்காக வெளியூர் பயணம் மேற்கொள்ளும்போது தட்கலில் டிக்கெட் எடுத்தால் அதில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளதாக காட்டும். அதே நேரத்தில் பிரீமியம் தட்கலில் எடுத்தால் உடனே டிக்கெட் கிடைக்கும். அதுவும் நாட்கள் குறைய குறைய ஏலமிடுவது போல் டிக்கெட்டின் விலை அதிகரிக்கும். இது முழுக்க முழுக்க மக்களின் பணத்தை கொள்ளையடிப்பது போல் உள்ளது. இரண்டு, மூன்று மடங்கு கட்டணம் அதிகரித்தால் சாதாரண மக்கள் எப்படி பயணம் செய்ய முடியும்? எனவே இதை அரசு நிறுத்த வேண்டும்.


முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை


இதுபற்றி தெற்கு ரெயில்வே முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி குகனேசன் கூறியதாவது:-


திடீர் என்று பயணம் செய்ய விரும்பும் பயணிகளுக்காக தட்கல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இருக்கைகள் ஒதுக்கீடு வரையறுக்கப்பட்டுள்ளது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இருக்கைகள் நிரப்பப்படும். தட்கல் பிரீமியம் என்பது ஒரு வித்தியாசமான கோட்டா முறையாகும். இதில் மாறும் கட்டணம் (டைனமிக் கட்டணம்) முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான ரெயில்களில் பிரீமியம் தட்கல் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஒரு வகுப்பின் அதிகபட்சம் 30 சதவீதம் தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல் முறை இருக்கும். தற்போது சர்வர் பிரச்சினை இல்லை. தட்கல் டிக்கெட்டுகள் பொதுமக்களுக்கு அதிகம் கிடைக்கின்றன.


நேரடியாகவும், இணைய முன்பதிவு மூலமாகவும் முன்பதிவு செய்யலாம். பயன்படுத்தப்படாத பிரீமியம் தட்கல் கோட்டாவுக்கு, அட்டவணைகள் தயாரிக்கும்போது தட்கல் காத்திருப்போர் பட்டியல் இருப்பவர்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்படும். சாதாரண தட்கல் கோட்டாவில் காத்திருப்பு பட்டியல் இல்லை என்றால், இந்த இருக்கைகள் பொது காத்திருப்பு பட்டியல் பயணிகளுக்கு வழங்கப்படும்.


இவ்வாறு அவர்கள் கூறினர்.

Friday, September 9, 2022

நெல்லையில் 727 புதிய பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

 நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அவர் நெல்லை மாவட்டத்தில் ரூ.74 கோடியே 24 லட்சம் மதிப்பில் முடிவுற்ற 29 திட்டப்பணிகளை திறந்து வைத்தார். ரூ.156 கோடியே 28 லட்சம் மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ள 727 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதன்படி 

  1. நெல்லை மாநகராட்சி சார்பில் ரூ.53 கோடியே 61 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்ட மேடை போலீஸ் நிலையம், 
  2. மனக்காவலம்பிள்ளை ஆஸ்பத்திரி சாலையில் பல்நோக்கு கூட்டரங்கம்,
  3.  ராமையன்பட்டி பகுதியில் 5 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம், 
  4. நவீனமயமாக்கப்பட்ட வ.உ.சி.மைதானம், 
  5. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ரூ.28 கோடி செலவில் பாளையங்கோட்டை, சேரன்மாதேவி, முக்கூடல், பாப்பாக்குடி ஆகிய இடங்களில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடங்கள், 
  6. ஏர்வாடி, பத்மநேரி, முன்னீர்பள்ளம், மூைலக்கரைப்பட்டி ஆகிய இடங்களில் துணை வேளாண்மை விரிவாக்கம் இயக்க கட்டிடங்கள் ஆகியவை திறந்து வைக்கப்பட்டன.
  7. சட்டத்துறை சார்பில் ரூ.4 கோடி 70 லட்சம் செலவில் நெல்லை அரசு சட்டக்கல்லூரியில் 12 வகுப்பறைகள், 4 ஆசிரியர் அறைகள் மற்றும் கழிப்பறை கட்டிடங்கள், 
  8. பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ.4 கோடியே 39 லட்சம் செலவில் வடக்கு செழியநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி கட்டிடம், கங்கைகொண்டான் அரசு மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறை மற்றும் ஆய்வு கட்டிடங்கள், 
  9. ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பில் ரூ.1 கோடியே 90 லட்சம் செலவில் அங்கன்வாடி கட்டிடங்கள், வகுப்பறை மற்றும் ஆய்வக கட்டிடங்கள், ஊராட்சி ஒன்றிய கட்டிடங்கள்,
  10.  நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய துறை சார்பில் ரூ.97 லட்சம் செலவில் அம்பை நகராட்சி ஆசிரியர் காலனியில் பூங்கா, விக்கிரமசிங்கபுரம் நகராட்சி அகஸ்தியர்புரத்தில் பூங்கா, 
  11. செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் ரூ.51 லட்சத்து 80 ஆயிரம் செலவில் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் நூலக கட்டிடம், 
  12. இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில் ரூ.15 லட்சம் செலவில் திருவேங்கடநாதபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டப்பட்டுள்ள சித்த மருத்துவமனை கட்டிடம் ஆகியவை திறந்து வைக்கப்பட்டது.


அடிக்கல் நாட்டினார்


நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.72 கோடியே 10 லட்சம் மதிப்பில் இருதயம், நரம்பு, சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவமனை கட்டிடம்,

 ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பில் ரூ.72 கோடியே 36 லட்சம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறை அலுவலக கட்டிடம், ஒன்றிய அலுவலக கட்டிடம், உயர்மட்ட பாலம், கலையரங்கங்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், அங்கன்வாடி கட்டிடங்கள், ரேஷன் கடைகள், பள்ளி சமையலறை கட்டிடங்கள், சாலை பணிகள், குடிநீர் திட்ட பணிகள் உள்ளிட்ட 722 பணிகளுக்கும், 

அபிஷேகபட்டி கால்நடை பண்ணையில் ரூ.9 கோடியே 42 லட்சம் மதிப்பில் நாட்டுக்கோழி இனப்பெருக்க வளாகம் மற்றும் குஞ்சு பொறிப்பகம், ரூ.1 கோடியே 35 லட்சத்தில் விக்கிரமசிங்கபுரம் நகராட்சி அகஸ்தியபுரம் பகுதியில் உள்ள தகனம் மேம்பாட்டு பணி மற்றும் களக்காடு நகராட்சி அலுவலகத்தில் கூடுதல் கட்டிடம் கட்டும் பணி,

 பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் மதிப்பில் நெல்லை சந்திப்பில் உள்ள ம.தி.தா. இந்து கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் பாரதியார், வ.உ.சிதம்பரனார் ஆகியோரின் நினைவு நுழைவுவாயில் மற்றும் கலையரங்கம் கட்டும் பணிக்கும் என மொத்தம் ரூ.156 கோடியே 28 லட்சம் மதிப்பில் 727 பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.




நெல்லை மாவட்ட மக்களின் தேவைகளும், எதிா்பாா்ப்புகளும்!

 திருநெல்வேலி மாவட்டத்தில் அணைக்கட்டுகளைத் தூா்வாரும் பணி உள்பட பல்வேறு தேவைகளும், எதிா்பாா்ப்புகளும் உள்ளன. அவற்றை தீா்க்க முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையும் விடுத்துள்ளனா்.


1790-ல் கிழக்கு இந்தியா கம்பெனியால் திருநெல்வேலி மாவட்டம் உருவாக்கப்பட்டு பின் பிரிட்டிஷ் மகாராணி விக்டோரியாவின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் வந்தது. ஆற்காடு நவாப்பிடமிருந்து 1801-ல் பிரிட்டிஷாா் இந்த நகரை கையகப்படுத்தி தின்னவேலி மாவட்டம் என பெயரிட்டனா். முதலில் திருநெல்வேலி நகரத்தை அடுத்து அமைந்துள்ள பாளைங்கோட்டையை தலைமையிடமாக கொண்டுதான் இந்த மாவட்டம் ஆரம்பிக்கப்பட்டது. பின் காலங்களில் திருநெல்வேலி நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டதாலும், திருநெல்வேலி சீமை என நாயக்கா் நவாப் காலங்களில் அழைக்கப்பட்டதாலும் இது தொடா்ந்து திருநெல்வேலி மாவட்டம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து கடந்த 20-10-1986 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டமும், 12-11-2019 ஆம் தேதி தென்காசி மாவட்டமும் பிரிக்கப்பட்டன. இப்போதைய திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி, சேரன்மகாதேவி ஆகிய வருவாய் கோட்டங்களும், 8 வட்டங்களும், 31 வருவாய் குறுவட்டங்கலும், 370 வருவாய் கிராமங்களும் உள்ளன.


நீா்வள மேம்பாடு: திருநெல்வேலி மாவட்டத்தின் அடையாளமாக தாமிரவருணி நதி திகழ்கிறது. இதில் கழிவுகள் கலப்பதை தடுக்கவும், நதி பாதுகாப்புக்கு சிறப்பு நிதி ஒதுக்கவும் வேண்டும். தாமிரவருணி நதி நீரை சேமிக்க கட்டப்பட்டுள்ள பாபநாசம் அணையைத் தூா் வார வேண்டும். மானூா் குளத்திற்கு சிற்றாறு தண்ணீா் தடையின்றி வந்து சேர ஆண்டுதோறும் தூா்வார வேண்டும். புதிதாக தாமிரவருணி நீரை கொண்டு செல்ல குழாய் திட்டங்களை ஆராய வேண்டும். வடக்கு மற்றும் தெற்கு கோடை மேழலகியான் உள்பட 7 கால்வாய்கள் உள்ளன. இவற்றில் கான்கிரீட் தளம் இல்லாததால் ஆண்டுதோறும் மராமத்துக்காக பல்லாயிரக்கணக்கில் பணம் செலவழிக்கப்படுகிறது. மேலும், கடைமடைக்கு தண்ணீா் செல்வதிலும் தடை ஏற்படுகிறது. கால்வாய்களில் கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும்.


வேளாண்மையில் கவனம்: தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களைப் போல தாமிரவருணி பாசன நீரைக் கொண்டு நெல் உற்பத்தியில் சிறக்கும் மாவட்டம் திருநெல்வேலி. அதுமட்டுமன்றி வாழை, கரும்பு, சிறுகிழங்கு, தானியவகைகளும் சாகுபடி செய்யப்படுகின்றன. மாங்காய் உற்பத்தியிலும் தனித்துவமான மாவட்டமாக உள்ளது. இம் மாவட்டத்திற்கு வேளாண்துறையின் இடா்பாடுகளாக அறுவடை இயந்திர தட்டுப்பாடு, அரசு கொள்முதல் நிலையங்கள் பற்றாக்குறையும் உள்ளது. இதுதவிர பாசன மடைகள் பராமரிப்புக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படாததால் பல கிராமங்களில் பாசன நீா் விரயமாவது அதிகரித்துள்ளது. ஒவ்வொரு வட்டத்திற்கும் அரசு சாா்பில் தலா 10 நெல் அறுவடை இயந்திரங்கள் உள்ளிட்டவை வாடகை கட்டணத்திற்கு இயக்கினால் கூடுதல் நன்மை கிடைக்கும். ராதாபுரம், மானூா் வட்டங்களில் பிச்சி, மல்லிகை, கேந்தி பூக்கள் சாகுபடி அதிகமுள்ளது. பூக்களுக்கான குளிா்பதன கிட்டங்கி, களக்காட்டில் அரசு வாழை கொள்முதல் நிலையம் ஆகியவை நீண்டநாள் கோரிக்கையாகவே தொடா்ந்து வருகின்றன. பனைத்தொழிலில் ஆயிரக்கணக்கானோா் உள்ளனா். பதனீா் உற்பத்தியைப் பெருக்கவும், பனைஓலை உள்ளிட்டவற்றால் உருவாக்கப்படும் கைவினை பொருள் உற்பத்தியை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


சுற்றுலாவுக்கு வழியில்லை: ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்த குற்றாலத்தில் சுற்றுலாத்துறை மூலம் பல்வேறு பணிகள் செய்யப்பட்டன. இப்போது தென்காசி மாவட்டத்திற்கு சென்றுவிட்டதால் அகஸ்தியா் அருவி, பாபநாசம், உவரி, களக்காடு தலையணை, சீவலப்பேரி, சுத்தமல்லி அணைக்கட்டு பகுதிகளில் புதிதாக வளா்ச்சித்திட்டங்களை உருவாக்க வேண்டும். பாபநாசம் தலையணையில் மக்கள் அனுமதிக்கப்படாமல் பூட்டிக்கிடக்கிறது. அதனை திறந்து பாதுகாப்பு அம்சங்களை அதிகரிக்க வேண்டும். ஆண்டுதோறும் தண்ணீா் விழும் அகஸ்தியா் அருவியில் குளிக்க செல்வோருக்கு விதிக்கப்படும் அதிகளவிலான கட்டுப்பாடுகளைத் தவிா்க்க வேண்டும். ரோப் காா், சிறுவா் நீச்சல் குளம் ஆகியவற்றை உருவாக்கலாம். நவக்கைலாயம், நவத்திருப்பதி கோயில்களுக்கு அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஆன்மிக சுற்றுலா தொகுப்பை போக்குவரத்துத்துறை மூலம் உருவாக்க வேண்டும். திருநெல்வேலி மாநகரில் சுற்றுலாவை மேம்படுத்த கூடுதல் திட்டங்களை வகுக்க வேண்டும்.


கல்வியில் கவனம்: திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்துறையின் வளா்ச்சி அபரிமிதமாக உள்ளது. உயா்கல்வித்துறையில் கூடுதல் தேவைகள் உள்ளன. குறிப்பாக அரசின் செவிலியா் பயிற்சிக் கல்லூரி, மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம் சாா்பில் கீழநத்தம் பகுதியில் உள்ள பல்கலைக்கழக விளையாட்டு மைதானம், களக்காடு, நான்குனேரி, மூலைக்கரைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உறுப்புக்கல்லூரிகளை அமைக்க வேண்டும். பாளையங்கோட்டையில் நீண்டநாள் கோரிக்கையான சித்த மருத்துவ பல்கலைக்கழகம் உருவாக்க வேண்டும். பி.காம்., பி.எஸ்சி. பாடப்பிரிவுகளில் கூடுதலான இடங்களை உருவாக்க வேண்டும். விளையாட்டு வீரா்களை அதிகரிக்கும் வகையில் விளையாட்டு விடுதிகளை அதிகரிக்க வேண்டும். பாா்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி உள்ள நிலையில், அவா்களுக்கான கல்லூரிக் கல்விக்கு இம் மாவட்டத்தில் வழியில்லை. ஆகவே, தென்மாவட்ட பாா்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவா்கள் பயன்பெறும் வகையில் திருநெல்வேலியில் சிறப்புக் கல்லூரி அமைக்க வேண்டும்.


தொழில் வளம் தேவை: திருநெல்வேலி மாவட்டத்தில் தொழில்வளத்தை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட கங்கைகொண்டான் சிப்காட் வளாகம், நான்குனேரி தொழில்நுட்ப பூங்கா ஆகியவற்றால் உள்மாவட்டத்தினருக்கு வேலை வாய்ப்பு கிடைப்பது குறைவாகவே உள்ளது. அதுகுறித்து கவனம் செலுத்த வேண்டும். பித்தளை பாத்திரங்கள், பத்தமடை பாய், மண்பாண்ட தொழில், வாழைநாா் பொருள் உற்பத்தி ஆகியவை சிறப்பாக உள்ளன. ஒருகாலத்தில் கொடிகட்டி பறந்த பேட்டை கூட்டுறவு நூற்பாலை கேட்பாரற்று கிடக்கிறது. அதை பயன்பாட்டுக்கு கொண்டுவந்தால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். அவற்றிற்கு ஆன்லைன் சந்தைப்படுத்துதல், தடையற்ற மூலப்பொருள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். இதுபோன்று பல்வேறு துறைகளிலும் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிா்பாா்க்கிறாா்கள்.


மழைக்கு உதிரும் சாலைகள்: திருநெல்வேலி மாநகரில் ஒவ்வொரு பருவழைக்கும் சாலைகள் உருக்குலைந்து போவது வாடிக்கையாக உள்ளது. இத்தகைய நிலை மாநகரின் வளா்ச்சிக்கு பெரும் தடையாக உள்ளது. வீதிகள் தோறும் உள்ளாட்சித் துறை சாா்பில் சாலைகள் கான்கிரீட் தளமாக மேம்படுத்துப்பட்டு வருகிறது. ஆனால், நெடுஞ்சாலை துறை வசம் உள்ள பிரதான சாலைகள் அடிக்கடி சேதமுற்று வாகன போக்குவரத்தை கடினமாக்குகிறது. வாகனப் போக்குவரத்து மிகுந்த சாலைகளை முறையாக முல்லிங் செய்து தரமாக அமைத்தால் மழைதோறும் சாலைகளை செப்பனிட தேவையிருக்காது.

Monday, September 5, 2022

பிராங்க் போன் கால்.. "அந்த" பரபர வீடியோ.. கோவை 360 சேனலை தட்டி தூக்கிய போலீஸ்! ஆக்சன் எடுத்தது ஏன்?

 கோயம்புத்தூர்: "கோவை 360 டிகிரி' என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வந்தவர்கள் மீது கோவை மாநகர காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இவர்கள் வெளியிட்ட சில வீடியோக்கள்தான் இந்த நடவடிக்கைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.


தமிழ்நாட்டில் தற்போது பிராங்க் கலாச்சாரம் அதிகரித்துவிட்டது. பொது இடங்களில் பல யூ டியூப் சேனல்கள் பிராங்க் செய்ய தொடங்கிவிட்டன.


அதிக வியூஸ் வரும் என்பதற்காக வித்தியாச வித்தியாசமாக பிராங்க் செய்து வருகின்றனர். சிலர் ஒருபடி மேலே போய் மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையிலும் பிராங்க் செய்கிறார்கள்.


பிராங்க் என்றால்.. திடீரென சாலையிலோ, பொது இடத்திலோ இருக்கும் ஒருவரிடம் ஏதாவது பேசி அவர்களை ஏமாற்றுவது. அல்லது கிண்டல் செய்வது, தொந்தரவு செய்வது.



பிராங்க்

கடைசியில் ஒரு எல்லை வரை அவர்களை தொல்லை செய்துவிட்டு, பின்னர் கேமரா இருக்கு பாருங்க என்று கூறி சமாதானம் செய்வது. இப்படி பிராங்க் செய்வதற்கு என்று தமிழ்நாட்டில் யூ டியூப் முழுக்க பல சேனல்கள் உருவாகி உள்ளன. இதற்கு முன்பே சென்னை உயர் நீதிமன்றம் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பிராங்க் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில்தான் கோவையில் பொது இடங்களில் பிராங்க் செய்ய கூடாது. அப்படி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.




கோவை பிராங்க்

இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். சிறப்பு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்படும், என்று கோவை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்தது. கோவையில் இருந்து செயல்படும் யூ டியூப் சேனல்கள் இதற்காக கண்காணிக்கப்படும் என்றும் கோவை மாநகர காவல்துறை தெரிவித்தது. இந்த நிலையில்தான் கோவையில் இருந்து செயல்பட்டு வந்த கோவை 360 டிகிரி சேனல் நிர்வாகிகள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது . இது தொடர்பாக கோவை மாநகரக் காவல்துறை விளக்கம் கொடுத்துள்ளது.




எச்சரிக்கை

அதில், கோவை மாநகர காவல் ஆணையர் .V.பாலகிருஷ்ணன், இ.கா.ப., உத்திரவின் பேரில் Prank Videos என்ற பெயரில் பெண்கள் மற்றும் முதியோர்களது சம்மதம் ஏதும் இன்றி மறைத்து வைக்கப்பட்டிருந்த கேமராக்கள் மூலம் அவர்களின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு அவர்களை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் துன்புறுத்தும் வகையில், வீடியோக்கள் எடுப்பவர்கள் குறித்து கோவை மாநகர சைபர் க்ரைம் காவல் நிலைய போலீசார் கண்காணித்து வந்தது.



கோவை 360 டிகிரி

இந்த நிலையில், "கோவை 360 டிகிரி' என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வந்தவர்கள் மேற்கண்ட Prank Videos என்ற பெயரில் பொதுமக்களின் சம்மதம் இன்றி அவர்களின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும், உடல்ரீதியாகவும், மனரீதியாக துன்புறுத்தும் வகையில் நடந்து கொண்டு அதை வீடியோ எடுத்து "கோவை 360 டிகரி" என்ற யூடியூப் சேனலில் வீடியா வெளியிட்டு உள்ளனர். இதை பார்த்து, அதன்பேரில் சைபர் க்ரைம் காவல் நிலைய குற்ற எண். 39/2022 U/s 354D IPC & 4 of TNPHW Act r/w 66E IT Act ன் படி "கோவை 360 டிகிரி" என்ற யூடியூப் சேனல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


ஆக்சன் ஏன்?

Prank Videos தொடர்பாக தேவையின்றி பொதுமக்களை மனஉளைச்சலுக்கு உள்ளாக்கும் நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. கோவை 360 டிகிரி சேனலில் பொதுவாக பார்க்கில் இருக்கும் பெண்களிடம் பிராங்க் செய்யப்படும். இரண்டு ஆண்கள் பார்க்கில் உள்ள பெண்களிடம் சென்று அவர்களிடம் கிண்டலாக எதாவது பேசுவது போலவும், அவர்களின் பாடி கார்ட் போல செயல்படுவது போலவும் பிராங்க் செய்யப்பட்டது.






Prank Videos

அதேபோல் போனில் பேசும் பெண்களுக்கு அருகில் சென்று இளைஞர் ஒருவர் இன்னொரு போனில் பேசுவது போல் நடித்து, அந்த பெண் பேசுவதற்கு எல்லாம் பதில் சொல்லி கிண்டல் செய்வது போலவும் பிராங்க் செய்யப்பட்டது. மேலும் பெண்களிடம் கேள்வி கேட்டு அதற்கு பதில் இல்லை என்றால் கிஸ் மீ, ஸ்லாப் மீ என்ற செய்வது போலவும் பிராங்குகளை இந்த சேனல் செய்து வந்தது. இந்த வீடியோக்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்தான் கோவை போலீசார் இவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.


Tuesday, July 26, 2022

திருநெல்வேலி மண்டலம் டாப் 10 பொறியியல் கல்லூரிகள் எவை? (What are the top 10 engineering colleges in Tirunelveli region?)

 கல்வியாளர் ரமேஷ்பிரபா தனது யூடியூப் சேனலில் தமிழகத்தின் திருநெல்வேலி பகுதியில் உள்ள டாப் 25 பொறியியல் கல்லூரிகள் எவை என பட்டியலிட்டுள்ளார். இதில் டாப் 10 பொறியியல் கல்லூரிகள் எவை என்பதை இப்போது பார்ப்போம். இதில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

1 திருநெல்வேலியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி பகுதியில் முதலிடத்தில் உள்ளது.


2 ஆம் இடத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இம்மானுவேல் அரசர் ஜெ.ஜெ காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் உள்ளது.


3 ஆவது இடத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள நேஷ்னல் இன்ஜினியரிங் காலேஜ் உள்ளது.


4 ஆவது இடத்தில் திருநெல்வேலியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாக பொறியியல் கல்லூரி உள்ளது.


5 ஆவது இடத்தில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி உள்ளது.


6 ஆவது இடத்தில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள செயிண்ட் சேவியர் கத்தோலிக் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் உள்ளது.


7 ஆவது இடத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிரான்சிஸ் சேவியர் இன்ஜினியரிங் காலேஜ் உள்ளது.


8 ஆவது இடத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ரோகிணி காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி உள்ளது.


9 ஆவது இடத்தில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனார் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் உள்ளது.


10 ஆவது இடத்தில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள பொன் ஜெஸ்லி காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் உள்ளது.

Tuesday, June 28, 2022

மேலப்பாளையத்தில் சூப்பர் மார்க்கெட்டில் திருடிய மருதகுளம் வாலிபர் கைது

  1.  மர்ம நபர் ஒருவர் கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருடிச்சென்றுவிட்டார். 
  2. போலீசார் மர்மநபரை கைது செய்து அவரிடம் இருந்து கடையில் திருடிய ரூ.7 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.


நெல்லை ரெட்டியார்பட்டி பால்பண்ணை பகுதியை சேர்ந்தவர் இசக்கி. இவரது மனைவி ராமபிரபா(வயது 37). இவர் மேலப்பாளையம் குறிச்சி முக்கு பகுதியில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். 

திருட்டு 

நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் ஒருவர் கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருடிச்சென்றுவிட்டார். இதுதொடர்பாக மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வந்தனர். அதில் கடையில் பணத்தை திருடியது நெல்லையை அடுத்த மருதகுளத்தை சேர்ந்த மில்டன்(வயது 38) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து கடையில் திருடிய ரூ.7 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். 

கைது 

கைது செய்யப்பட்ட மில்டன்மீது நெல்லை, விருதுநகர், குமரி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆதாய கொலை, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.


Sunday, June 19, 2022

கீழநத்தத்தில் திருட்டு: இருவா் கைது

 பாளையங்கோட்டை அருகேயுள்ள கீழநத்ததில் நகைகள் திருடப்பட்ட வழக்கில் பெண் உள்பட இருவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.


கீழநத்தம் மேலூரைச் சோ்ந்தவா் நம்பி. இவா், சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவரது வீட்டில் இருந்த 46.5 பவுன் தங்க நகைகள் கடந்த சில நாள்களுக்கு முன்பு திருடு போனதாம். இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா காவல் ஆய்வாளா் பாலகிருஷ்ணன் மற்றும் போலீஸாா் விசாரணை நடத்தினா். இந்த வழக்கில் பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பால்சாமி மனைவி திவ்யா, அதே பகுதியைச் சோ்ந்த பாண்டியராஜா ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.


கைது செய்யப்பட்டுள்ள திவ்யாவுக்கு, மாமன்ற தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு பின்னா் வேட்பாளா் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Saturday, June 18, 2022

ஐ.டி. ஊழியர் வீட்டில் 46½ பவுன் நகை திருடிய உறவுக்கார பெண் கைது

 நெல்லையில் கோயில் கொடை விழாவிற்கு சென்ற உறவினர் வீட்டிலையே 46 சவரன் நகைகளை கொள்ளையடித்த அதிமுக பெண் பிரமுகர் மற்றும் நகைகளை அடகு வைக்க உதவியாக இருந்த அதிமுக அம்மா பேரவை மாவட்ட துணை செயலாளர் அதிரடி கைது செய்யப்பட்டனர்.




நெல்லை பாளையங்கோட்டை அருகே கீழநத்தம் மேலூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் சட்டநாதன். இவரது மகன் நம்பி (வயது 39). இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் கீழநத்தம் மேலூரில் நடந்த கோவில் விழாவில் குடும்பத்துடன் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவரின் உறவினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் நம்பி தனது வீட்டில் பீரோவில் இருந்த 46½ பவுன் தங்க நகைகளை மர்மநபர் கொள்ளையடித்து சென்றதாக பாளையங்கோட்டை தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து நம்பியின் வீட்டுக்கு வந்து சென்ற உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் நம்பியின் உறவுக்கார பெண்ணான பாளையங்கோட்டை சிவன் கோவில் மேலரதவீதியை சேர்ந்த ராஜகோபால்மகள் திவ்யா (28) என்பவர் நகைகளை திருடியது தெரியவந்தது.

இதையடுத்து தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் பதுங்கி இருந்த திவ்யாவை கைது செய்தனர். மேலும் அவருக்கு அங்கு நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுத்தர உதவியதாக, பாளையங்கோட்டை கோட்டூர் ரோட்டை சேர்ந்த பாண்டியராஜ் (39), விருத்தாச்சலம் வடக்கு புதுப்பேட்டை லூக்காஸ் தெருவை சேர்ந்த சதீஷ் (30) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 46½ பவுன் நகைகள் மீட்கப்பட்டன. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

Friday, June 17, 2022

நெல்லை அருகே துணிகரம்: ஐ.டி. நிறுவன ஊழியர் வீட்டில் 46½ பவுன் நகைகள் கொள்ளை

 



நெல்லை அருகே ஐ.டி. நிறுவன ஊழியர் வீட்டில் 46½ பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

திருநெல்வேலி

நெல்லை:


நெல்லை அருகே ஐ.டி. நிறுவன ஊழியர் வீட்டில் 46½ பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


ஊழியர்


நெல்லை பாளையங்கோட்டை அருகே மேலூர் கீழநத்தம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சட்டநாதன். இவருடைய மகன் நம்பி (வயது 39). இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.


கொரோனா பரவல் காரணமாக சொந்த ஊருக்கு வந்த நம்பி தனது வீட்டில் இருந்தே கணினி மூலம் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.


கொள்ளை


கடந்த மாதம் 31-ந்தேதி அப்பகுதியில் நடந்த திருமண விழாவில் நம்பி குடும்பத்தினருடன் பங்கேற்றார். பின்னர் அவர் தனது மனைவி, குழந்தைகளின் நகைளை வீட்டில் உள்ள பீரோவில் வைத்து பூட்டினார். எனினும் சாவியை பீரோவின் மேலேயே வைத்து இருந்தார்.


சில நாட்களுக்கு பிறகு நம்பி பீரோவை திறந்து பார்த்தபோது, அதில் இருந்த 46½ பவுன் நகைகள் கொள்ளை போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.


சம்பவத்தன்று நம்பியின் வீட்டில் நைசாக புகுந்த மர்மநபர்கள், பீரோவை திறந்து நகைகளை கொள்ளையடித்து சென்றதாக தெரிகிறது.


இதுகுறித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீடு புகுந்து நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


இ்ந்த துணிகர சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மங்களூரு-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயிலை நெல்லை வரை நீட்டிக்க வேண்டும்-ஞானதிரவியம் எம்.பி. வலியுறுத்தல்



திருநெல்வேலி

நெல்லை:


நெல்லை தொகுதி எம்.பி. ஞானதிரவியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-


மதுரை-சண்டிகர் எக்ஸ்பிரஸ் ரெயில் (12687/ 12688) பெட்டிகளை பயன்படுத்தி, கன்னியாகுமரியில் இருந்து நெல்லை, மதுரை வழியாக ஹரித்வார், ரிஷிகேஷிக்கு நேரடி ரெயில் சேவை தொடங்க வேண்டும்.


நாகர்கோவில்-தாம்பரம் இடையே வாரம் 3 நாட்கள் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலை (22657/22658) தினசரி ரெயிலாகவும், நாகர்கோவில்-சென்னை சென்டிரல் இடையே இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலை (12689/12690) தினசரி ரெயிலாகவும் இயக்க வேண்டும்.சென்னை எழும்பூர்-நாகர்கோவில் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (12667/12668) மற்றும் சென்னை எழும்பூர்-ஜோத்பூர் ஆகிய 2 ரெயில்களையும் இணைத்து ஒரே ரெயிலாக கன்னியாகுமரியில் இருந்து ஜோத்பூர் வரையிலும் நெல்லை, மதுரை, திருச்சி, சென்னை வழியாக வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலாக இயக்க வேண்டும்.


மங்களூரு- திருவனந்தபுரம் இடையே இயக்கப்படும் தினசரி எக்ஸ்பிரஸ் ரெயிலை நாகர்கோவில் வழியாக நெல்லை வரையிலும் நீட்டிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

Wednesday, June 1, 2022

நெல்லை பொறியியல் கல்லூரியில் புகையிலை விழிப்புணர்வு நிகழ்ச்சி

 மருதகுளத்தில் உள்ள நெல்லை பொறியியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் புகையிலை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.




நெல்லை மாவட்டம் மருதகுளத்தில் உள்ள நெல்லை பொறியியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் புகையிலை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


கல்லூரி முதல்வர் ஜின்னா ஷேக் முகம்மது தலைமை தாங்கி புகையிலையின் தீமைகள் பற்றி எடுத்துரைத்தார்.


நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாவட்ட சுகாதார அலுவலர் தமிழ் செல்வன், கலந்து கொண்டு பேசினார்.  நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக புகையிலை அலுவலர் டாக்டர் சுபலெட்சுமி புகையிலை  மற்றும் போதை பொருள் உபயோகத்தால் ஏற்படும் தீமைகள் பற்றியும், வாழ்க்கையில் இதனால் ஏற்படும் சீர்கேடுகளை பற்றியும், பல உதாரணங்களோடு விரிவாக எடுத்துரைத்தார்.


நிகழ்ச்சியில்  கல்லூரியின் அனைத்து மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். விழாவில் சமூக ஆர்வலர் டேவிட் பொன்ராஜ், புகையிலை மற்றும் போதை பொருள் பற்றிய உறுதிமொழியை மாணவர்கள் மத்தியில் வாசித்தார். கல்லூரியின் நாட்டு நலப் பணி திட்ட அலுவலர் முஜீப் முகம்மது முஸ்தபா வரவேற்றார்.


கல்லூரியின் விளையாட்டு இயக்குநர் சுந்தர்ராஜ் நன்றி கூறினார். மாவட்ட சுகாதார மேற்பார்வையாளர் ஜான் ஜெயச்சந்திரன் , சுகாதார ஆய்வாளர் வெங்கடேஷ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tuesday, May 3, 2022

தமிழக அரசு நடத்திய தொழில்நுட்ப போட்டியில் பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரிக்கு ரூ.50 ஆயிரம் பரிசு

 தமிழக அரசு நடத்திய தொழில்நுட்ப போட்டியில் பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரிக்கு ரூ.50 ஆயிரம் பரிசை கலெக்டர் விஷ்ணு வழங்கினார்


நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் மாணவ-மாணவிகள், இளைஞர்கள் மத்தியில் புதிய தொழில்களை ஊக்குவிக்கும் வகையில் 4 வகையான தொழில் நுட்ப போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டியில் 12 குழுக்கள் பங்கு பெற்றன.

இதில் பங்கேற்ற நெல்லை வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி மாணவ-மாணவியர் சங்கர இசை செல்வம் (கம்ப்யூட்டர் சயின்ஸ்), விஜயதர்ஷினி, சண்முகலட்சுமி, மாளவிகா சாம் (சிவில்) அன்டோ ஜோயல், இஸ்மாயில் குழுவினர் வென்றனர். இதற்கான ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசை நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வழங்கி பாராட்டினார்.

பின்னர் கலெக்டர் விஷ்ணு பேசியதாவது:-
 ‘ஸ்டார்ட்அப்’ என்ற புதிய தொழிலில் ஈடுபட விரும்பும் கல்லூரி மாணவ, மாணவிகளை  ஊக்குவிக்கும் வகையில் இந்த பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரியை சார்ந்த அனைத்து துறை மாணவ-– மாணவிகளுக்கும் புது தொழில் தொடங்க தேவையான அனைத்து பயிற்சிகளும், வழி–காட்டுதலும் கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த போட்டிக்கு ஊக்கமும், உற்சா–கமும் அளித்த பொது–மேலாளர்கள், கல்லூரி முதல்வர், துறை பேராசிரியர்கள், தொழில் முனைவோர் பயிற்சி இயக்குனர் மற்றும் பயிற்சி அளித்த மனோகர் (கம்ப்யூட்டர் சயின்ஸ்), சுமில்குமரன் (சிவில்) ஆகியோரை கல்லூரி நிறுவனர் கிளிட்டஸ் பாபு, நிர்வாக இயக்குநர் அருண்பாபு ஆகியோர் பாராட்டினர்.



Sunday, April 24, 2022

மருதகுளம் நெல்லை பொறியியல் கல்லூரியில் வளாக தேர்வு நடைபெற்றது

 மருதகுளம் நெல்லை பொறியியல் கல்லூரியில் வளாக தேர்வு நடைபெற்றது.

தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்ட காட்சி.
நெல்லை:

மருதகுளம் நெல்லை பொறியியல் கல்லூரியில்  சென்னை பான்யான் டெக்னாலஜி, டெக் மகேந்திரா, பானசோனிக் மற்றும் மதர்ஸன் ஆகிய நிறுவனங்களின் சார்பில் அனைத்து துறைகளின் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு தொழில்நுட்ப திறனறிவு தேர்வு  மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது.

கல்லூரி முதல்வர் ஜின்னா ஷேக் முகம்மது தலைமை தாங்கினார். கலந்து கொண்ட நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டு துறை அலுவலர்கள்  டெக் மகேந்திரா வினோத், பானசோனிக் முனுசாமி, மதர்ஸன் மீரான் முகைதீன் மற்றும் பான்யான் டெக்னாலஜி சலீம் ஆகியோர் கொண்ட  குழுவினர் நேர்முகத்தேர்வு மற்றும் தொழில்நுட்ப திறனறிவு தேர்வினை நடத்தினர்.

இறுதியாக 73 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமண ஆணைகள் மேற்படி நிறுவனங்களால் கல்லூரி முதல்வர் ஜின்னா ஷேக் முகம்மது முன்னிலையில் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை கல்லூரி துறை தலைவர்கள் பிச்சம்மாள், சுப்புலெட்சுமி, அனுலா பியூட்டி, சுந்தர்ராஜன், டேரல் ஆல்பிரட், பர்வதவர்த்தினி, பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அலுவலர் முகம்மது மற்றும் அனைத்து துறை பேராசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.

Sunday, January 16, 2022

திருநெல்வேலி சுண்டக்கறி தெரியுமா ?

 திருநெல்வேலி சுண்டக்கறி தெரியுமா ?

*பொங்கச்சோறும்_சுண்டக்கறியும்:*

சாப்பாட்டை ரசனையாக உண்ணும் திருநெல்வேலிக்காரர்கள் வரலாற்றில் சுண்டக்கறி முக்கிய இடம்பெறும். திருநெல்வேலிகாரன் தின்னு கெட்டான்னு ஒரு சொல் வழக்கு உண்டு

தைப் பொங்கல் அன்று வாசலில் பொங்கல் வைத்து, இலையில் படைத்த காய்கறிகளை கொண்டு அவியல், பூசணிக்காய் பச்சடி, புடலங்காய் பொரியல், சிறுகிழங்கு பொரியல் ஆகியவற்றுடன் இடி சாம்பார் வைத்து மதியம் சாப்பிடுவது வழக்கம்.

பொங்கல் அன்று மதியம் பொங்கலுக்கென்றே சிறப்பாக கிடைக்கும் சிறுகிழங்கு, சேப்பங்கிழங்கு, பிடி கிழங்கு ஆகியவற்றுடன் கேரட், பீன்ஸ், உருளை, சீனி அவரைக்காய், முருங்கைக்காய், நாட்டு வாழைக்காய், மாங்காய் ஆகியவை சேர்த்து அவியல் செய்வார்கள்.

அது போல பொங்கச்சோறுக்கு என்றே திருநெல்வேலி பகுதியில் பல வித காய்கறிகளை கொண்டு இடி சாம்பார் என்ற குழம்பு வைப்பார்கள்.

இதோடு பூசணிக்காய் பச்சடி அல்லது வெண்டக்காய் பச்சடி , சிறு கிழங்கு பொரியல் வகைகள் என தயார் செய்து பொங்கல் விருந்து தடபுடலாக நடைபெறும்.

பொங்கல் அன்று மதியம் இதனை உண்டு ஒய்வெடுத்த பின்பு

பின்னர் இரவில் மீதமிருக்கும் (கட்டாயம் மீதமிருக்கும் அதற்காகவே அதிகமா வைப்பார்கள் )இடிசாம்பார் அவியல் பச்சடி அனைத்தையும் கொண்டு சுண்டக்கறி வைக்கும் படலம் இனிதே துவங்கும்.

இதில் முட்டைகோஸ் பொரியல் இருந்தால் சேர்க்க மாட்டார்கள் அது ஊசிபோயிடும் (கெட்டுவிடும்)

அதென்ன சுண்டக்கறி?

மதியம் வைத்த இடி சாம்பார், அவியல், பச்சடி, பொரியல் அனைத்தையும் ஒரு பெரிய பாத்திரத்தில் ஒன்றாக சேர்த்து அதனை மீதமான தீயில் சூடேற்ற வேண்டும். இந்த பொருட்கள் அனைத்தும் ஒன்றாக இணைந்து சுண்டி வரும். அதன் வாசனையே ஒரு விதமாக ரம்மியமாக இருக்கும்.

இந்த கவலையோடு தேவைக்கேற்ப சற்று புளிக்கரைசல் மற்றும் மிளகாய் வத்தல் பொடி, உப்பு சேர்த்து மண் சட்டியில் சுண்ட வைத்தால் கூடுதல் சுவையாக இருக்கும்.

பொங்கச்சோறு:

பொங்கல் விட்ட சாதத்தை முந்தைய நாள் இரவில் உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு வைத்து விடுவோம். இந்த சாதம் தான் எங்களுக்கு மறுநாள் மதிய உணவே....

இந்த பொங்கச்சோறில் (பழைய சோறு) தயிர் விட்டு பிசைந்து சாதம்பாதி சுண்டகறி பாதின்னு சுண்டக்கறிய தொட்டு சாப்பிட்டால் பச்சரிசி சாதம் உருண்டை உருண்டையா உள்ள போறதே தெரியாம வயித்தை நிரப்பிடும்.

பொங்கலுக்கு மறுநாளுக்கு மறுநாள் பொங்கல் சோறு தீர்ந்திடும். ஆனா சுண்டக்கறி இருக்கும். கொஞ்சம் சூடா சாதம் வடிச்சு சுண்டக்கறி சேர்த்து அதில் சிறிது நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட்டால் தேவாமிர்தமாக இருக்கும்....

அதே சுண்டக்கறியை சூடாக தோசையுடன் சேர்த்து சாப்பிட்டால் ஆகா.... சுவையோ சுவையாக இருக்கும்.

30,000 விதைகள்… 90 நாள்கள்… 62,000 ரூபாய்! பராமரிப்புச் செலவில்லாத பனங்கிழங்கு!

 `தைப்பொங்கல்’ என்றாலே கடித்துச் சுவைக்கக் கரும்பும் பனங்கிழங்கும்தான் நினைவுக்கு வரும். சில பகுதிகளில் பொங்கல் வழிபாட்டில் இடம்பெறும் கிழங்கு வகைகளில் பனங்கிழங்கும் ஒன்று.


இக்கிழங்கு கரிசல் மண், செம்மண்ணில் வளரும் என்றாலும், செம்மண்ணில் விளையும் கிழங்குக்குத் தனிச்சுவை உண்டு. தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம் சுற்று வட்டார செம்மண் பகுதிகளில் பனங் கிழங்கு அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம் சோனகன்விளையிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள மேலக் கானத்தில் பனங்கிழங்கு சாகுபடி செய்துவருகிறார் மணிமுத்து. பனங்கிழங்கு அறுவடைப் பணிகளைக் கவனித்துக் கொண்டிருந்த அவரை `பொங்கல் சிறப்பிதழு’க்காகச் சந்தித்தோம்.

பாத்தியிலிருந்து பனங்கிழங்குகளைத் தோண்டி எடுத்தபடியே நம்மிடம் பேசத் தொடங்கினார். “இந்தப் பகுதி முழுக்க வாழை விவசாயம்தான் நடக்குது. வாழை விவசாயத்தோட வருஷா வருஷம் பனங்கிழங்குச் சாகுபடியும் நடக்குது. எங்கப்பா ராஜமாணிக்கம், 30 வருஷத்துக்கு மேல வாழை விவசாயமும், கிழங்கு சாகுபடியும் செஞ்சுகிட்டு வர்றாங்க. இப்போ 11 வருஷமா இயற்கை முறையில விவசாயம் செய்துகிட்டு வர்றாங்க.


நான் பி.காம் முடிச்சிருக்கேன். காயாமொழியில வாழை, பப்பாளி சாகுபடி செஞ்சுகிட்டு வர்ற சக்திகுமார் அண்ணன்தான் அப்பாவை இயற்கை விவசாயத்துக்கு மாத்தினார். அவர் கூட நிறைய இயற்கை விவசாயப் பயிற்சி வகுப்புகள்ல கலந்துருக் கேன். கல்லூரியில படிச்சப்பவே களை எடுக்குறது, இடுபொருள் தயாரிக்கிறது, தெளிக்கிறதுன்னு அப்பாவோட சேர்ந்து தோட்டத்துல எல்லா வேலையையும் செய்ய ஆரம்பிச்சேன். உயர்படிப்பு படிச்சு கைநிறையச் சம்பளம் வாங்குற நிறைய பேரு இப்போ இயற்கை விவசாயத்துப் பக்கம் திரும்பிக்கிட்டு வர்றாங்க. அதனால, நானும் விவசாயம் செய்யலாம்ன்னு முடிவெடுத்தேன்’’ அறிமுகம் சொன்னவர் தனது விவசாய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

‘‘இப்போ ரெண்டு வருஷமா 2 ஏக்கர்ல ஏத்தன், கற்பூரவல்லி வாழை சாகுபடி செஞ்சுகிட்டு வர்றேன். விவசாய நிலத்துக்குள்ளயும், வேலி ஓரங்களிலும் 200 பனைமரங்கள் இருக்கு. இந்தப் பனைகள்ல இருந்து பதனீர் இறக்குறதில்ல. ஆனா, ஒவ்வொரு வருஷமும் பனை சீஸன் முடிஞ்சு கீழே விழுற பனம்பழங்களைச் சேகரிச்சு, பனங்கிழங்கு சாகுபடியை செஞ்சுகிட்டு வர்றோம். எங்க பகுதியில பனங்கிழங்கு சாகுபடியைப் பெரும்பாலும் பெண்கள்தான் செய்வாங்க. ஏன்னா, இதுல தண்ணி தெளிக்கிறது மட்டும்தான் வேலை. மத்தபடி எந்தப் பராமரிப்பும் தேவையில்ல. இந்த வருஷம் 26,000 பனைவிதைகளைக் கிழங்கு சாகுபடிக்காக ஊன்றியிருக்கேன்” என்றவர், வருமானம் குறித்துப் பேசினார்.


பனம்பழத்தில் விதைகள்

“ஒரு பனம்பழத்துல 3 விதைகள் இருக்கும். போன வருஷம் 10,000 பனம்பழங்களை நடவுக்காகச் சேகரிச்சேன். 30,000 பனைவிதை களை ஊன்றினேன். பன்றித்தாக்குதல், வண்டு அரிப்பு, விளைச்சல் இல்லாத கிழங்குகள்ன்னு அறுவடையில 6,000 கிழங்குகள் பழுதாயிடுச்சு. மீதமுள்ள 24,000 கிழங்களை நேரடியா விற்பனை செஞ்சேன். ஒரு கிழங்கு 3 ரூபாய். அதுமூலம் 72,000 ரூபாய் வருமானமாக் கிடைச்சது. பனம்பழம் சேகரிப்பு, பனைவிதை பிரிச்சு அடுக்கக் கூலி, கிழங்கு தோண்டி எடுக்குற கூலின்னு 10,000 ரூபாய் செலவாச்சு. அதுபோக, 62,000 ரூபாய் லாபமாக் கிடைச்சது. இந்த வேலைகளையும் வீட்டுல உள்ளவங்களே செஞ்சா இந்தச் செலவுத் தொகையும் மிச்சம்தான்” என்றார்.



தொடர்புக்கு, மணிமுத்து,
செல்போன்: 94984 24218

இப்படித்தான் பனங்கிழங்கு சாகுபடி!

பனங்கிழங்கு சாகுபடி செய்வது குறித்து மணிமுத்து கூறிய தகவல்கள் பாடமாக இங்கே:

ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரைதான் பனை பருவம் (சீஸன்). இந்தப் பருவத்துக்குப் பிறகுதான் பனங்காய்கள், பழுத்துப் பனம்பழங்களாகக் கீழே விழும். ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை கிடைக்கும் பழங்களைச் சேகரித்து நிழலான பகுதியில் குவித்து வைக்க வேண்டும். அக்டோபர், நவம்பர் மாதங்களில் விதை நட்டால் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் அறுவடைக்கு வரும். 5 அடி நீளம், 3 அடி அகலம், ஓர் அடி உயரத்தில் பாத்தி அமைக்க வேண்டும். கிடைக்கும் பனை விதையின் எண்ணிக்கையைப் பொறுத்து, எத்தனை பாத்திகள் வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம்.



பனைவிதைகள் கிழங்குகளாக

குறைந்தபட்சம் ஓர் அடி உயரத்தில் பாத்தி அமைத்தால்தான் கிழங்கு ஆழமாக வேரூன்றி வளரும். அறுவடையின்போது பிடுங்கி எடுக்கவும் சுலபமாக இருக்கும். சில விவசாயிகள் பாத்தி அமைக்காமல் தரைக்குக் கீழ் கால் முதல் அரை அடி ஆழத்தில் குழி எடுத்து, குழிக்குள் விதைகளை அடுக்குவார்கள். இதனால், அறுவடையின்போது கிழங்குகளைப் பிடுங்கி எடுப்பதில் சிரமம் ஏற்படுவதுடன் கிழங்குகள் அதிக எண்ணிக்கையில் சேதாரமாகும்.

பாத்தி எடுத்த பிறகு, 10 கிலோ மட்கிய சாணம், 2 கிலோ வேப்ப இலை, 3 கிலோ அடுப்புச்சாம்பலை (ஒரு பாத்திக்கான அளவு) கலவையாக்கிப் பரவலாகத் தூவி விட வேண்டும். பாத்தியின் மீது விதைகளை நெருக்கமாக அடுக்க வேண்டும். இதன் மேல் இன்னொரு அடுக்கும் அடுக்கலாம். கூடுதலாக அடுக்குவதால் இரண்டு பாத்திக்குச் செலவாகும் தண்ணீர் மிச்சமாகும்.

விதை ஊன்றும் அன்று பழங்களின் சதைப்பகுதியைக் கையால் பிதுக்கி விதைகளைத் தனித்தனியே எடுத்து விட வேண்டும். பனம்பழங்களில் குறைந்தபட்சம் ஒன்றும் அதிகபட்சமாக மூன்று விதைகளும் இருக்கும். இதில் வண்டு துளைத்த கொட்டைகள், மிகச்சிறிய கொட்டைகள் எனச் சேதாரமான கொட்டைகளைக் கழித்து விட வேண்டும். பாத்தியின் மீது ‘கண் பாகம்’ கீழ் நோக்கி இருக்கும் படி நெருக்கமாக அடுக்க வேண்டும். அடுக்கிய பிறகு, அதன் மீது லேசாக மண் தூவி, பாத்தி ஓரங்களில் மண் அணைத்துவிட்டு, பாத்தி முழுவதும் தண்ணீர் ஊற்ற வேண்டும்.


பனைவிதைகள் விதைப்பு

தண்ணீர் ஊற்றும்போது, மேலுள்ள மணல், இரண்டு அடுக்குப் பனை விதைகளின் இடுக்குகளில் சென்று சேரும். மேல் பகுதியில், மண் குறைந்தால், மீண்டும் மண்ணைத் தூவி மீண்டும் தண்ணீர் ஊற்ற வேண்டும். ஒருநாள் இடைவெளியில் தொடர்ந்து தண்ணீர் தெளிக்க வேண்டும். அதற்குப் பிறகு, ஈரப்பதத்தைப் பொறுத்துத் தண்ணீர் தெளிக்கலாம். இப்பாத்திகளின் மீது பனை ஓலைகளை மூடாக்காக மூடினால், நீர் ஆவியாகாது. இதனால், கோழிகளும் பாத்திகளைக் கிளறாது.

20-ம் நாளுக்கு மேல் முளைக்கத் தொடங்கும். 40-ம் நாளுக்கு மேல் வேர் பிடித்து வளரும். 60-ம் நாளுக்கு மேல் கிழங்கு பருமனாகத் தொடங்கும். 90 முதல் 110-ம் நாளுக்குள் அறுவடை செய்யலாம். 90-ம் நாளுக்கு மேல் பாத்திகளின் மேல் பகுதியில் ஆங்காங்கே வெடிப்புக் காணப்படும். அப்போது ஓரிடத்தில் தோண்டிப் பார்க்க வேண்டும். கிழங்கின் தோல் வெடித்த நிலையில் காணப்பட்டால், அறுவடைக்குத் தயார் என்று அர்த்தம். அதிகபட்சமாக 110-ம் நாளுக்குள் அறுவடை செய்துவிட வேண்டும்.


Full LockDown At Nellai - நெல்லையில் முழு ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள்

 கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 2&வது வாரமாக இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. நெல்லையில் முழு ஊரடங்கால் கடைகள் அடைக்கப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடின.


தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 2&வது வாரமாக இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

இதனையொட்டி நெல்லை மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மாநகர பகுதியில் 500 போலீசாரும், மாவட்டத்தில் 2000 போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.



முன்னீர்பள்ளம், கங்கைகொண்டான், சீதபற் பநல்லூர், காவல்கிணறு, வன்னிகோனேந்தல், மூன்றடைப்பு உள்ளிட்ட 6 நிரந்தர சோதனை சாவடிகள் மற்றும் 12 தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் தேவையின்றி சாலையில் சுற்றி திரிந்தவர்களை பிடித்து விசாரித்தனர். பின்னர் அவர்களை எச்சரிக்கை செய்து வீட்டுக்கு திருப்பி அனுப்பி வைத்தனர். ஒரு சில இடங்களில் வாகன ஓட்டிகளுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.

மாநகர பகுதியில் பழையபேட்டை, டவுன், சந்திப்பு, தச்சநல்லூர், பாளை, சமாதானபுரம், கே.டி.சி. நகர், கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட மாநகர பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். வாகன ஓட்டிகள் தேவையின்றி செல்வது தெரியவந்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

அத்தியாவசிய தேவைகளான பால், மருத்துவம் தொடர்பான வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டது. கடைகள் அடைக்கப் பட்டதால் மக்கள் நடமாட்டம் இல்லை. மாநகர பகுதியில் உள்ள எஸ்.என். ஹைரோடு, புறவழிச்சாலைகள், திருச்செந்தூர், தூத்துக்குடி சாலைகள் உள்ளிட்டவை வாகனங்கள் நடமாட்டம் இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது.

தைப்பூசத்தையொட்டி திருச்செந்தூருக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மட்டும் வழக்கம்போல் நடந்து சென்றனர். அவர்கள் முகக்கவசம் அணிந்து செல்லுமாறு போலீசார் அறிவுரை வழங்கினர்.

சாலையில் சுற்றித்திரியும் ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னார்வ தொண்டு அமைப்பினர் 3 வேளையும் உணவு வழங்கினர்.

களக்காடு தலையணை, பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி, அணைக்கட்டுகள் பகுதிகளில் மக்கள் செல்ல ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு உள்ளதால் அந்த இடங் களும் வெறிச்சோடி காணப்பட்டன.

ஓட்டல்களில் இருந்து சாப்பாடு பார்சல்கள் எடுத்துச்சென்று வீடுகளுக்கே கொண்டு கொடுத்தவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதேபோல நெல்லை மாவட்டத்தில் முக்கிய நகரமான அம்பை, கல்லிடைக்குறிச்சி, முக்கூடல், சேரன்மகாதேவி, திசையன்விளை, ராதாபுரம், உவரி, களக்காடு உள்ளிட்ட பகுதிகளிலும் பொதுமக்கள் சாலைகளில் சுற்றித்திரிய அனுமதிக்கப்படவில்லை.  

இதனால் மாவட்டம் முழுவதும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. உவரி, ராதாபுரம், கூடங்குளம் பகுதிகளில் உள்ள கடற்கரைகளில் கடலோர பாதுகாப்பு படையினர் ரோந்து சென்றனர். அங்கும் சுற்றுலா பயணிகள்  மற்றும் பொதுமக்கள் அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.