Saturday, October 9, 2021

மாணவர்கள் போராட்டம் காரணமாக நெல்லை மருத்துவ கல்லூரிக்கு 10 நாட்கள் விடுமுறை

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் இளநிலை மருத்துவ படிப்பு, முதுநிலை மருத்துவ படிப்பு, மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் உள்ளன.
இதில் சேர்ந்துள்ள மாணவர்கள் மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்களில் மூத்த மாணவர்களுக்கும், ஜூனியர் மாணவர்களுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.
இதுதொடர்பாக நேற்று மருத்துவ கல்லூரி மாணவர்களுக்குள் திடீர் மோதல் ஏற்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவம் குறித்து மருத்துவ கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன், கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் டாக்டர்கள் விடுதிக்குச் சென்று இரண்டு தரப்பு மாணவர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் எச்சரிக்கப்பட்டனர்.
மேலும் இந்த பிரச்சனையை சமரசமாக முடித்து வைப்பதற்காக வருகிற தசரா விடுமுறை வரை 10 நாட்கள் மருத்துவக்கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது.
விடுதியில் உள்ள அனைத்து மாணவர்களும் உடனடியாக காலி செய்ய வேண்டும் என்றும் முதல்வர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து நேற்று மாலையே ஆண்கள் பிரிவு விடுதியும், பெண்கள் பிரிவு விடுதியும் உடனடியாக மூடப்பட்டது. மாணவ- மாணவிகள் அனைவரும் வெளியேறினார்கள்.இன்று மருத்துவக்கல்லூரி பகுதியில் அசம்பாவிதம் ஏற்படாதவாறு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment