Friday, January 2, 2015

Tirunelveli River Linking Project - வெள்ளநீர் கால்வாயை வெட்டி முடிப்பது எப்போது?

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் வறட்சி பகுதிகளுக்கு வரப்பிரசாதம்
வெள்ளநீர் கால்வாயை வெட்டி முடிப்பது எப்போது? ரூ.369 கோடி திட்டம், தாமதமாவதால் ரூ.669 கோடியாக உயர்ந்து நிற்கிறது

50 ஆயிரம் மில்லியன் கன அடி தண்ணீர்...!

இது சேமிக்கப்படும் தண்ணீர் அல்ல; வீணாகும் தண்ணீர்.

எங்கோ வீணாகும் தண்ணீர் அல்ல. நம் கண்முன்னே பாய்ந்தோடும் தாமிரபரணியில் இருந்து, ஆண்டு தோறும் கடலில் போய் கலக்கும் தண்ணீரின் சராசரி அளவுதான் இது.

பாபநாசம் அணை, முழுகொள்ளளவான 142 அடி நிரம்பினால், சுமார் 5,500 மில்லியன் கன அடி தண்ணீரை மட்டுமே அதில் தேக்க முடியும். அதைவிட, சுமார் 10 மடங்கு நீர் கடலில் போய் கலக்கிறது, என்றால் நம்ப முடிகிறதா?

பொதிகைமலையில் அடர்ந்த வனப்பகுதியான, பூங்குளம் என்ற குளத்தில் இருந்து தாமிரபரணி தனது பயணத்தை தொடங்குகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் புன்னக்காயல் என்ற இடத்தில் கடலோடு சங்கமிக்கிறது. நெல்லை மாவட்டத்தில் 80 கிலோ மீட்டர், தூத்துக்குடி மாவட்டத்தில் 40 கிலோ மீட்டர் என மொத்தம் 120 கிலோ மீட்டர் பாய்ந்து வளப்படுத்துகிறது.

தாமிரபரணி தென்மாவட்டங்களுக்கு தன்னையே தர அர்ப்பணித்து இருக்கிறது. ஆனால், அதை நாம் பயன்படுத்திக் கொண்டோமா? ஏன், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களையாவது வளப்படுத்தி இருக்கிறேமோ?

வெள்ளநீர் கால்வாய் திட்டம்

நெல்லை மாவட்டத்தில் நாங்குநேரி, ராதாபுரம் தாலுகாக்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம் தாலுகா பகுதிகள் வறண்டுவிட்டன. ஒருபுறம் செழிப்பு, இன்னொருபுறம் வறட்சி. அதற்கு தீர்வுதான் என்ன?

இவ்வாறு ஆராய்ந்து, “வெள்ளநீர் கால்வாய் திட்டம்“ என்ற ஒரு திட்டத்தை கொண்டுவந்தார்கள். அதன் மூலம் தாமிரபரணியில் இருந்து பாயும் உபரிவெள்ளத்தை வறட்சி பகுதிகளுக்கு திருப்பிவிட்டு, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 23 ஆயிரத்து 40 எக்டேர் நிலம் பாசன வசதியை ஏற்படுத்தி கொடுப்பதுதான். மேற்கண்ட தாலுகா பகுதிகள் செழிப்படைவதுடன், குடிநீர் பிரச்சினையும் தீர்க்கப்படும் என்பதற்காக வெள்ளநீர் கால்வாய் திட்டம் கொண்டு வரப்பட்டது. 21-2-2009 அன்று இதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.

இந்த திட்டத்துக்கு தமிழக அரசு ரூ.369 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரித்தது. முதல் கட்டமாக ரூ.65 கோடி ஒதுக்கப்பட்டு, 2009-ம் ஆண்டில் பணிகள் நடைபெற்றன.

இதன் தொடர்ச்சியாக 2010-ம் ஆண்டு ரூ.41 கோடியும், 2011-ம் ஆண்டு ரூ.107 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றன.

3-வது, 4-வது கட்ட பணிகள்

முதற்கட்டமாக கன்னடியன் கால்வாய் திட்டப்பணிகள் வெள்ளங்குளி முதல் திடீயூர் வரை 20.3 கிலோ மீட்டர் தூரமும், 2-வது கட்டமாக திடீயூர் முதல் மூலைக்கரைப்பட்டி வரை 18.6 கிலோ மீட்டர் தூரமும் கால்வாய் வெட்டப்பட்டு இருக்கிறது. பாலம் கட்டும் பணிகளும் நடந்து உள்ளன. ஆனால், 3, 4-வது கட்ட பணிகள் இன்னும் நடைபெறவில்லை.

மூலைக்கரைப்பட்டி முதல் காரியாண்டி வரை 12.7 கிலோமீட்டர் தூரம் 3-ம் நிலைப் பணிகளும், காரியாண்டி முதல் எம்.எல்.தேரிவரை உள்ள 21.4 கிலோமீட்டர் தூரம் கொண்ட 4-ம் நிலைப் பணிகளும் நடைபெறாமல் உள்ளன. இந்த கால்வாய் திட்டமானது, தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு ஆகிய ஆறுகளை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது.

நெல்லை மாவட்டம் வெள்ளங்குளி முதல் தூத்துக்குடி மாவட்டம் எம்.எல்.தேரி வரை 73 கிலோமீட்டர் தூரத்துக்கு, இந்த வெள்ளநீர் கால்வாய் அமைக்கப்பட்டால்...

100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். வறட்சியின் பிடியில் சிக்கி உள்ள பகுதிகளில் நெல்லை மாவட்டத்தில் 177 குளங்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் 75 குளங்களும் நிரம்பும். 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிணறுகளில் நல்ல நீரூற்று கிடைக்கும். கடல்நீர், நிலங்களுக்குள் உட்புகுவது தடுக்கப்படும்.

பருமழை பெய்யும் போது மட்டும் வீணாக கடலுக்கு செல்லும் சுமார் 13 ஆயிரத்து 758 மில்லியன் கன அடி தண்ணீரில், வெறும் 2 ஆயிரத்து 800 மில்லியன் கன அடி நீரை வெள்ளநீர் கால்வாயில் திருப்பிவிட்டாலே, மேற்கண்ட பயன்களை அடைந்துவிட முடியும்.

2009-ல் தொடங்கிய இந்த கால்வாய் பணிகள் ஏற்கனவே திட்டமிட்டபடி நடந்திருந்தால், 2012-ம் ஆண்டில் நிறைவடைந்திருக்க வேண்டும். ஆனால், 3-வது, 4-வது கட்டப்பணிகள் முடிவடையாததால், வெள்ளநீர் கால்வாய், இன்னும் எட்டும் தூரத்தில் வரவில்லை.

இந்த திட்டத்துக்காக சேரன்மாதேவி, வீரவநல்லூர் பகுதியில் பாறைகளை உடைத்து கால்வாய் அமைத்து உள்ளனர். அந்த பாறை குவியல் மலைபோல் கால்வாய் கரைகளில் குவித்து போடப்பட்டு உள்ளது. அதில் தற்போது மரங்களும் முளைத்துவிட்டன.

ரூ.369 கோடியில் நிறைவேற்றப்பட வேண்டிய இந்த திட்டம் தொடர்ந்து தாமதமாகி வந்ததால், மேலும் ரூ.300 கோடி வரை, அதாவது ரூ.669 கோடி தேவைப்படும் என்று அனுமானமாக கூறப்படுகிறது.

15 நாட்கள் வெள்ளம்

கடந்த 2 மாதங்களில் மட்டும் பலத்த மழையால் தாமிரபரணி ஆற்றில் பல முறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 15 நாட்களுக்கும் மேலாக தாமிரபரணியில் வந்த வெள்ளம், ஸ்ரீவைகுண்டம் அணையை தாண்டி வீணாக கடலில் சென்று கலக்கிறது. இந்த வெள்ளத்தால் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டன. இவ்வாறு வீணாகி கடலில் சேரும் தண்ணீரை பயன்படுத்தத்தான், வெள்ளநீர் கால்வாய் திட்டம் பெரிய அளவில் பயன்படுகிறது.

இந்த ஆண்டில் பருவமழை சரிவர பெய்து இருப்பதால், வறட்சியான பகுதிகளிலும் குளங்கள் நிரம்பி இருக்கின்றன. ஆனால், எல்லா ஆண்டிலும் இதுபோன்று மழை பெய்யும் என்று கூற முடியாது. அதுபோன்ற சூழ்நிலையில் வறண்டு கிடக்கும் ராதாபுரம், நாங்குநேரி, சாத்தான்குளம் தாலுகா பகுதிகளுக்கு தண்ணீர் வழங்க இந்த வெள்ளநீர் கால்வாய் திட்டம் தேவை.

இதற்காக கன்னடியன் கால்வாயில் இருந்து, வெள்ளநீர் கால்வாய்க்கு செல்லும் தலைமை மதகுக்கான பணி முடிந்து, தண்ணீரை வெளியேற்றுவதற்கு தயார் நிலையில் உள்ளது.

எனவே திட்டத்துக்கான 3, 4-வது கட்ட பணிகளையும் பாலம் பணிகளையும் விரைவாக முடிக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.

நெய்க்கு அலைவது ஏன்?

“வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவது ஏன்?“ என்று ஓர் பழமொழி உண்டு.

அதுபோல் ஜீவநதி தாமிரபரணியை வைத்துக்கொண்டு நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில், குடிநீருக்கும், பாசன நீருக்கும் நாம் அல்லோல படுவது என்பது வெட்கப்பட வேண்டிய விஷயம்.

பொதுமக்கள் இதில் விழித்தால்தான், அரசியல்வாதிகள் தங்கள் பாதைகளை மாற்றிக்கொள்வார்கள்.

வெறும் இலவசம், மானியம் போன்ற திட்டங்களில் மதிமயங்கி கிடந்தால் இதுபோன்ற எதிர்கால திட்டங்கள் கேள்விக்குறியாகி விடும்.


Thank you dailyThanthi : http://epaper.dailythanthi.com/showxml.aspx?id=16501163&code=2661

No comments:

Post a Comment