Tuesday, June 28, 2022

மேலப்பாளையத்தில் சூப்பர் மார்க்கெட்டில் திருடிய மருதகுளம் வாலிபர் கைது

  1.  மர்ம நபர் ஒருவர் கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருடிச்சென்றுவிட்டார். 
  2. போலீசார் மர்மநபரை கைது செய்து அவரிடம் இருந்து கடையில் திருடிய ரூ.7 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.


நெல்லை ரெட்டியார்பட்டி பால்பண்ணை பகுதியை சேர்ந்தவர் இசக்கி. இவரது மனைவி ராமபிரபா(வயது 37). இவர் மேலப்பாளையம் குறிச்சி முக்கு பகுதியில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். 

திருட்டு 

நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் ஒருவர் கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருடிச்சென்றுவிட்டார். இதுதொடர்பாக மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வந்தனர். அதில் கடையில் பணத்தை திருடியது நெல்லையை அடுத்த மருதகுளத்தை சேர்ந்த மில்டன்(வயது 38) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து கடையில் திருடிய ரூ.7 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். 

கைது 

கைது செய்யப்பட்ட மில்டன்மீது நெல்லை, விருதுநகர், குமரி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆதாய கொலை, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.


Sunday, June 19, 2022

கீழநத்தத்தில் திருட்டு: இருவா் கைது

 பாளையங்கோட்டை அருகேயுள்ள கீழநத்ததில் நகைகள் திருடப்பட்ட வழக்கில் பெண் உள்பட இருவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.


கீழநத்தம் மேலூரைச் சோ்ந்தவா் நம்பி. இவா், சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவரது வீட்டில் இருந்த 46.5 பவுன் தங்க நகைகள் கடந்த சில நாள்களுக்கு முன்பு திருடு போனதாம். இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா காவல் ஆய்வாளா் பாலகிருஷ்ணன் மற்றும் போலீஸாா் விசாரணை நடத்தினா். இந்த வழக்கில் பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பால்சாமி மனைவி திவ்யா, அதே பகுதியைச் சோ்ந்த பாண்டியராஜா ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.


கைது செய்யப்பட்டுள்ள திவ்யாவுக்கு, மாமன்ற தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு பின்னா் வேட்பாளா் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Saturday, June 18, 2022

ஐ.டி. ஊழியர் வீட்டில் 46½ பவுன் நகை திருடிய உறவுக்கார பெண் கைது

 நெல்லையில் கோயில் கொடை விழாவிற்கு சென்ற உறவினர் வீட்டிலையே 46 சவரன் நகைகளை கொள்ளையடித்த அதிமுக பெண் பிரமுகர் மற்றும் நகைகளை அடகு வைக்க உதவியாக இருந்த அதிமுக அம்மா பேரவை மாவட்ட துணை செயலாளர் அதிரடி கைது செய்யப்பட்டனர்.




நெல்லை பாளையங்கோட்டை அருகே கீழநத்தம் மேலூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் சட்டநாதன். இவரது மகன் நம்பி (வயது 39). இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் கீழநத்தம் மேலூரில் நடந்த கோவில் விழாவில் குடும்பத்துடன் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவரின் உறவினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் நம்பி தனது வீட்டில் பீரோவில் இருந்த 46½ பவுன் தங்க நகைகளை மர்மநபர் கொள்ளையடித்து சென்றதாக பாளையங்கோட்டை தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து நம்பியின் வீட்டுக்கு வந்து சென்ற உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் நம்பியின் உறவுக்கார பெண்ணான பாளையங்கோட்டை சிவன் கோவில் மேலரதவீதியை சேர்ந்த ராஜகோபால்மகள் திவ்யா (28) என்பவர் நகைகளை திருடியது தெரியவந்தது.

இதையடுத்து தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் பதுங்கி இருந்த திவ்யாவை கைது செய்தனர். மேலும் அவருக்கு அங்கு நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுத்தர உதவியதாக, பாளையங்கோட்டை கோட்டூர் ரோட்டை சேர்ந்த பாண்டியராஜ் (39), விருத்தாச்சலம் வடக்கு புதுப்பேட்டை லூக்காஸ் தெருவை சேர்ந்த சதீஷ் (30) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 46½ பவுன் நகைகள் மீட்கப்பட்டன. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

Friday, June 17, 2022

நெல்லை அருகே துணிகரம்: ஐ.டி. நிறுவன ஊழியர் வீட்டில் 46½ பவுன் நகைகள் கொள்ளை

 



நெல்லை அருகே ஐ.டி. நிறுவன ஊழியர் வீட்டில் 46½ பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

திருநெல்வேலி

நெல்லை:


நெல்லை அருகே ஐ.டி. நிறுவன ஊழியர் வீட்டில் 46½ பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


ஊழியர்


நெல்லை பாளையங்கோட்டை அருகே மேலூர் கீழநத்தம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சட்டநாதன். இவருடைய மகன் நம்பி (வயது 39). இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.


கொரோனா பரவல் காரணமாக சொந்த ஊருக்கு வந்த நம்பி தனது வீட்டில் இருந்தே கணினி மூலம் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.


கொள்ளை


கடந்த மாதம் 31-ந்தேதி அப்பகுதியில் நடந்த திருமண விழாவில் நம்பி குடும்பத்தினருடன் பங்கேற்றார். பின்னர் அவர் தனது மனைவி, குழந்தைகளின் நகைளை வீட்டில் உள்ள பீரோவில் வைத்து பூட்டினார். எனினும் சாவியை பீரோவின் மேலேயே வைத்து இருந்தார்.


சில நாட்களுக்கு பிறகு நம்பி பீரோவை திறந்து பார்த்தபோது, அதில் இருந்த 46½ பவுன் நகைகள் கொள்ளை போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.


சம்பவத்தன்று நம்பியின் வீட்டில் நைசாக புகுந்த மர்மநபர்கள், பீரோவை திறந்து நகைகளை கொள்ளையடித்து சென்றதாக தெரிகிறது.


இதுகுறித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீடு புகுந்து நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


இ்ந்த துணிகர சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மங்களூரு-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயிலை நெல்லை வரை நீட்டிக்க வேண்டும்-ஞானதிரவியம் எம்.பி. வலியுறுத்தல்



திருநெல்வேலி

நெல்லை:


நெல்லை தொகுதி எம்.பி. ஞானதிரவியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-


மதுரை-சண்டிகர் எக்ஸ்பிரஸ் ரெயில் (12687/ 12688) பெட்டிகளை பயன்படுத்தி, கன்னியாகுமரியில் இருந்து நெல்லை, மதுரை வழியாக ஹரித்வார், ரிஷிகேஷிக்கு நேரடி ரெயில் சேவை தொடங்க வேண்டும்.


நாகர்கோவில்-தாம்பரம் இடையே வாரம் 3 நாட்கள் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலை (22657/22658) தினசரி ரெயிலாகவும், நாகர்கோவில்-சென்னை சென்டிரல் இடையே இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலை (12689/12690) தினசரி ரெயிலாகவும் இயக்க வேண்டும்.சென்னை எழும்பூர்-நாகர்கோவில் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (12667/12668) மற்றும் சென்னை எழும்பூர்-ஜோத்பூர் ஆகிய 2 ரெயில்களையும் இணைத்து ஒரே ரெயிலாக கன்னியாகுமரியில் இருந்து ஜோத்பூர் வரையிலும் நெல்லை, மதுரை, திருச்சி, சென்னை வழியாக வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலாக இயக்க வேண்டும்.


மங்களூரு- திருவனந்தபுரம் இடையே இயக்கப்படும் தினசரி எக்ஸ்பிரஸ் ரெயிலை நாகர்கோவில் வழியாக நெல்லை வரையிலும் நீட்டிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

Wednesday, June 1, 2022

நெல்லை பொறியியல் கல்லூரியில் புகையிலை விழிப்புணர்வு நிகழ்ச்சி

 மருதகுளத்தில் உள்ள நெல்லை பொறியியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் புகையிலை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.




நெல்லை மாவட்டம் மருதகுளத்தில் உள்ள நெல்லை பொறியியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் புகையிலை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


கல்லூரி முதல்வர் ஜின்னா ஷேக் முகம்மது தலைமை தாங்கி புகையிலையின் தீமைகள் பற்றி எடுத்துரைத்தார்.


நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாவட்ட சுகாதார அலுவலர் தமிழ் செல்வன், கலந்து கொண்டு பேசினார்.  நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக புகையிலை அலுவலர் டாக்டர் சுபலெட்சுமி புகையிலை  மற்றும் போதை பொருள் உபயோகத்தால் ஏற்படும் தீமைகள் பற்றியும், வாழ்க்கையில் இதனால் ஏற்படும் சீர்கேடுகளை பற்றியும், பல உதாரணங்களோடு விரிவாக எடுத்துரைத்தார்.


நிகழ்ச்சியில்  கல்லூரியின் அனைத்து மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். விழாவில் சமூக ஆர்வலர் டேவிட் பொன்ராஜ், புகையிலை மற்றும் போதை பொருள் பற்றிய உறுதிமொழியை மாணவர்கள் மத்தியில் வாசித்தார். கல்லூரியின் நாட்டு நலப் பணி திட்ட அலுவலர் முஜீப் முகம்மது முஸ்தபா வரவேற்றார்.


கல்லூரியின் விளையாட்டு இயக்குநர் சுந்தர்ராஜ் நன்றி கூறினார். மாவட்ட சுகாதார மேற்பார்வையாளர் ஜான் ஜெயச்சந்திரன் , சுகாதார ஆய்வாளர் வெங்கடேஷ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.