திருநெல்வேலி : நெல்லையில் சீமைக்கருவேலி மரங்களை அகற்றிவிட்டு ஒரே நேரத்தில் 2 ஆயிரம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை கிராமப்புற பெண்கள் முன்னின்று நடத்தினர்.
தமிழகம் முழுவதும் நீர்க்கருவை எனப்படும் சீமைக்கருவேலி மரங்களை அகற்ற ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன்பேரில் தமிழக அரசும் அரசும் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு ஆணைவெளியிட்டு நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகிறது. குறிப்பாக தற்போது வடகிழக்குபருவமழை துவங்கும் இக்காலகட்டத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியும் புதிய மரக்கன்றுகள் நடும்திட்டமும் பரவலாக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் மத்திய அரசின் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களை கொண்டு தற்போது கிராமப்புறங்களுக்கு பயனுள்ள திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன.
நெல்லையை அடுத்துள்ள ரெட்டியார்பட்டி கிராமத்தில் குளத்துப்பகுதியில் சுமார் 7.44 ஏக்கர் பரப்பில் முளைத்திருந்த வேலிக்கருவை மரங்கள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டன. இதில் நீர்ப்பிடிப்பு பகுதி போக மீதமுள்ள 5 ஏக்கர் நிலப்பரப்பில் முழுமையாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை ஒரே நாளில் நடும் திட்டம் நடந்தது. நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் விஜயகுமார் இந்த பணிகளை துவக்கிவைத்தார். இந்த திட்டத்தை பெண்களே முன்னின்று நடத்தினர். இந்த கிராமத்தின் பஞ்சாயத்து தலைவியான அருணாமுரளிதரன் முன்னிலையில் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றும் 200க்கும் மேற்பட்டபெண்கள் தங்கள் கிராமத்தின் வளர்ச்சிதிட்டமாகவும், பசுமைதிட்டமாகவும் இதனை மேற்கொண்டனர்.இதில் பலா, வேம்பு, மா என பலன்தரும் மரங்கள் நடப்பட்டன. வட்டார வளர்ச்சி அலுவலகர்கள் பிரான்சிஸ் மகராஜன், முத்துக்குமாரசாமி, யூனியன் சேர்மன் சொர்ணரமா தங்கராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னோடி திட்டமாக இதனை செயல்படுத்துவதன் மூலம் ஒரு கிராமமே பசுமையாக மாறும் என நம்பிக்கை தெரிவித்தனர்.